அங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து வாங்கப்பட்ட இரண்டு கார்கி இன நாய்க்குட்டிகள், சிங்கப்பூர் வந்த ஒரு வாரத்திற்குள் உயிரிழந்த சம்பவத்தை விலங்கு, கால்நடை மருத்துவச் சேவை ஆணையம் விசாரித்து வருகிறது.
மலேசியாவிலிருந்து இந்த நாய்க்குட்டிகளை வாங்கியதாக குமாரி சென் என்பவர் கூறினார்.
அவர் தனது முழுப் பெயரையும் பணியையும் கூற மறுத்துவிட்டார். நாய்க்குட்டிகளுக்கு விலையாகவும் விநியோகச் செலவு மற்றும் அவற்றின் உணவுக்காகவும் $6,400 தொகையை விற்பனையாளருக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 27ஆம் தேதி நாய்க்குட்டிகள் சிங்கப்பூரில் உள்ள குமாரி சென் வீட்டுக்கு விநியோகிக்கப்பட்டன. ஆனால், மறுநாளில் இருந்து அந்தக் குட்டிகள் நோய்வாய்ப்பட்டன. வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுடன் ஒரு குட்டியின் வாயில் நுரை தள்ளியது.
நாய்க்குட்டிகளுக்கு 'கேனைன் பார்வோவைரஸ்' எனப்படும் தொற்று நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சிகிச்சை அளித்தும் இரு நாய்க்குட்டிகள் நவம்பர் 2, 3ஆம் தேதிகளில் இறந்துவிட்டன.
இரு குட்டிகளையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவச் செலவாக $12,000 செலவழித்ததாக குமாரி சென் தெரிவித்தார்.
குமாரி சென் நாய்குட்டிகளை அவரிடம் விற்றவருக்கு தொடர்பு செய்ய முயற்சி செய்தார். ஆனால், விற்பனையாளர் குமாரி சென்னுக்கு பணத்தை திருப்பித் தரவோ அவை மாண்டதற்கு பொறுப்பு ஏற்கவோ மறுத்துவிட்டார்.
மலேசியாவிலிருந்து கொண்டு வரப்படும் விலங்குகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். நாய்க்குட்டிகள் இரண்டும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்ததாகவும் அவற்றுக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டதாகவும் குமாரி சென்னிடம் கூறப்பட்டது. ஆனால், போட்டதாக விற்பனையாளர் கூறினாலும் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று குமாரி சென் கூறினார். இந்த சம்பவத்தினால் தாம் மிகவும் பதிப்படைந்ததாகவும் அவர் கூறினார்.

