அதிகரிக்கும் பணவீக்கம், உயரும் வட்டி விகிதம், நிச்சயமில்லாத சந்தை நிலவரங்கள் ஆகியவை காரணமாக சிங்கப்பூரர்களின் நிதி வளம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஈடு இல்லா கடன் அளவு கூடியிருக்கிறது. அடமான நெருக்குதல்கள் அதிகரிக்கின்றன. தங்களுடைய வீட்டுக் கடனை அடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் சிங்கப்பூரர்கள் முன்பைவிட அதிகமாகி இருக்கிறார்கள் என்பதே இதற்கான காரணம்.
ஓசிபிசி வங்கி 21 வயது முதல் 65 வரை வயதுள்ள வேலை பார்க்கும் 2,182 பேரை உள்ளடக்கி ஆகஸ்ட் மாதம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வு மூலம் இந்த விவரங்கள் தெரியவந்து இருக்கின்றன.
சிங்கப்பூரர்கள் சேமிப்புக்கு பெயர் பெற்றவர்களாகவே தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.
அதேவேளையில், அவர்கள் நெருக்கடி காலத்தை மனதில் கொண்டு சேமிப்பவர்களாகத் தெரியவில்லை.
பயணம் போன்றவற்றில் கண்டபடி செலவழிக்கிறார்கள் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. முதலீட்டு வருமானங்கள் சரியில்லாமல் இருப்பதும் மேலும் ஒரு பிரச்சினையாகி உள்ளது.
இவை எல்லாம் சேர்ந்து ஓசிபிசி நிதிவள அட்டவணை அளவை இந்த ஆண்டில் 61 ஆகக் குறைத்து விட்டன. இது சென்ற ஆண்டில் 62 ஆக இருந்தது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 31 விழுக்காட்டினர் ஈடில்லா கடன்களை அதிகமாக வாங்கினர். கடன் அட்டை கடன்கள், கல்விக் கடன்கள், வீடு புதுப்பிப்பு கடன்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இத்தகைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவர்களின் ஆற்றல் 3% குறைந்து இருக்கிறது. 19 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் தங்களுடைய கடனை அடைப்பதில் கொஞ்சம் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள்.
அடமானக் கடனைப் பொறுத்தவரை, வீட்டுக் கடனை அடைப்பதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 40 விழுக்காட்டினர் கூறினர்.
கடனை அடைக்கும் நோக்கத்தில் சிறிய வீட்டுக்கு மாறிக்கொள்ள அல்லது வீட்டை விற்றுவிட வேண்டி இருக்கும் என்று சென்ற ஆண்டைவிட அதிகமானவர்கள் கோடிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த 40 விழுக்காடு என்பது கடந்த நான்காண்டுகளில் காணாத ஒன்றாக, ஆக அதிகமானதாக இருக்கிறது என்று ஓசிபிசி தெரிவித்து இருக்கிறது.
கடன் நெருக்கடிகள் கூடினாலும் அவசரகாலங்களைக் கருத்தில்கொண்டு போதிய அளவுக்குச் சிங்கப்பூரர்கள் சேமிக்கவில்லை என்றும் தங்களுடைய நடப்பு சம்பளத்தில் ஆறுமாத கால சம்பளத்தைச் சேர்த்து வைக்காதவர்கள் 20 விழுக்காட்டினர் என்றும் ஆய்வு காட்டுகிறது.
தனிப்பட்டவர்களிடம் அவசரகால நிதி என்று ஒன்று இருக்க வேண்டும். மூன்று முதல் ஆறு மாதச் சம்பளம் அளவுக்கு அது இருக்க வேண்டும் என்று நிதித் துறை ஆலோசனையாளர்கள் பொதுவாக அறிவுரை வழங்குவதுண்டு.
குடும்பத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலையைச் சமாளிக்க அந்த நிதி கட்டாயமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், முன்பைவிட அதிகமான சிங்கப்பூரர்கள், தங்களுடைய சேமிப்பை சுற்றுப் பயணம் போன்றவற்றுக்குக் கண்டபடி செலவழிக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
இவை ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரர்கள் செய்திருக்கும் முதலீடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய சராசரி வருமானம் இந்த ஆண்டில் குறைந்து இருக்கிறது.
சென்ற ஆண்டில் 1.5% ஆக இருந்த இந்த வருவாய், இந்த ஆண்டில் 0.7% ஆகக் குறைந்துவிட்டது.
இந்த ஆண்டில் முதலீடுகளில் இருந்து நட்டம் ஏற்பட்டுவிட்டதாக 36 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இந்த அளவு சென்ற ஆண்டு 26%ஆக இருந்தது என்றும் ஓசிபிசி நடத்திய அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

