காவல்துறை அதிகாரி ஒருவர், கடனாகவும் ரொக்கமாகவும் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பூ ட்ஸீ சியாங், 45, என்ற அந்த அதிகாரி மீது நேற்று குற்றம் சமத்தப்பட்டது.
அவர் லஞ்சம் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை எதிர் நோக்குகிறார். நீதி நடைமுறைக்கு இடையூறாக இருந்திருக்கிறார் என்று கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.
கார்டெல் சான் யுயென் குவாங், வாங் ஹுவாட் ஆகிய இரண்டு பேரிடம் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் அந்த அதிகாரி, ஏழு முறை மொத்தம் $32,500 லஞ்சம் வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் ஒரு குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $100,000 வரைப்பட்ட அபராதமும் விதிக்க முடியும்.
நீதி நடைமுறைக்கு இடையூறாக இருந்திருப்பதாகத் தெரியவந்தால் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் அவருக்கு அபராதமும் ஏழு ஆண்டுகள் வரைப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

