மலேசியா, தாய்லாந்து, புருணை நாடுகளுடன் இணைந்து, 'கெபாயா' எனப்படும் மலாய், பெரானக்கான் சமூகத்தினரின் பாரம்பரிய உடையை யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலுக்கு முன்மொழியவுள்ளது சிங்கப்பூர்.
சிங்கப்பூரின் முதல் யுனெஸ்கோ பன்னாட்டு முன்மொழிவான இது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சிங்கப்பூரின் மலாய் சமூக மரபுடைமையில் முக்கிய பங்கு வகிக்கும் கெபாயா, தென்கிழக்காசியாவில் உள்ள தனித்துவமான கலாசார சிறப்புகளைப் பறைசாற்றுவதாக கூறியது, தேசிய மரபுடைமைக் கழகம்.
மலாய், சீன, இந்திய, ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகள் கெபாயாவின் வேலைப்பாடுகளில் பிரதி பலிக்கப்படுவதுண்டு.
சிங்கப்பூரில் பாரம்பரிய, சமூக நிகழ்வுகளுக்கு அணியப்படுவதுடன், கெபாயாவானது டிக்கிர் பாராட், டொண்டாங் சாயாங், வாயாங் பெரனக்கான் ஆகிய மலாய் பாரம்பரியக் கலைகளிலும் இடம்பெறுகிறது.
அவ்வகையில், நமது பல்லின கலாசாரத்தின் ஒரு குறியீடாக அது விளங்குவதோடு, நமது துறைமுக மரபுடைமையிலும் அது பங்கு வகிப்பதாக கழகம் சுட்டியது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளைக் கூட்டி இந்த பன்னாட்டு முன்மொழிவைக் குறித்து மலேசியா ஆலோசித்ததை தொடர்ந்து, சிங்கப்பூர் அதில் பங்குபெற முடிவெடுத்ததாகக் கூறியது கழகம்.
கெபாயா அணியும் முறைகள், அதன் கலைநய நுட்பங்கள், தையல் வேலைப்பாடு மற்றும் வடிவமைப்புகள் முதலியவற்றை வருங்காலத் தலைமுறையினருக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இம்முன்மொழிவில் பங்குபெறுவதாகவும் கழகம் குறிப்பிட்டது.
கெபாயாவைத் தயாரிப்பதிலும் அணிவதிலும் அதன் மரபுகளைப் பாதுகாத்துப் பேணுவதிலும் உள்ள கலாசாரக் கூறுகள் இந்த நான்கு நாடுகளிலும் வேறுபட்டிருந்தாலும், அடிநாதமாக விளங்கும் அம்சங்களைக் கொண்டு கெபாயா இப்பட்டியலுக்கு முன்மொழியப்படுகிறது.
இப்பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்கான பரிந்துரைகளை அறிய, இவ்வாண்டு ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் நடத்தியது போன்று அடுத்த ஆண்டும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை நடத்த தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்யவுள்ளது.

