தொடர்ச்சியாக மானபங்கம் செய்து வந்த ஆடவர் காவல்துறை கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க மாறுவேடங்களுடன் திரிந்து ஏமாற்றி வந்தார்.
கூ தெக் புவாட் மருத்துவ
மனையில் இதற்கு முன்னர் தாதியாகப் பணிபுரிந்த அந்த ஆடவர் 2017 ஜூலை மாதம் இரண்டே வாரங்களில் ஆறு பள்ளிச் சிறுமி களை மானபங்கம் செய்துவிட்டு தப்பினார்.
ஹங்காங், செங்காங் போன்ற பகுதிகளின் மேம்பாலங்களைக் கடந்து தங்களது பள்ளிக்குச் சென்ற 10 வயது முதல் 15 வயது வரையிலான சிறுமிகளை அவர் சீண்டினார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 10 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 15 சிறுமிகளை அவர் மானபங்கம் செய்தார்.
காவல்துறையின் கைகளில் சிக்காமல் தப்பிவந்த அவரைப் பிடிக்க நான்கு அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட் டது. அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார் அப்போதைய காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான (டிஎஸ்பி) லோ ஜிங் ஹார், 47. ஆடவர் அடிக்கடி உலவும் பகுதிகளை அந்தப் படை கண்காணித்தது.
2017 ஜூலை 21ஆம் தேதி ஆங்கர்வேல் ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் திரிந்துகொண்டிருந்த அந்த ஆடவரை காவல்துறை படை சுற்றி வளைத்தது.
அப்போது விரல் ரேகை அடையாளத்தில் இருந்து தப்பிக்க அவர் தனது விரல்களில் உறை மாட்டி இருந்தார்.
அந்தத் தருணத்தை விளக்கிய டிஎஸ்பி லோ, "நாங்கள் நெருங்கியபோது பதற்றத்துடன் அந்த ஆடவர் காணப்பட்டார். தீவிர விசாரணை மேற்கொண்டதில் மானபங்கம் செய்யக் காத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்," என்றார்.
கைது செய்யப்பட்ட அந்த மானபங்கக் குற்றவாளிக்கு பின்னர் மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
உள்துறை அமைச்சின் தேசிய தின விருதுகளுக்காக நேற்று அங்கீகரிக்கப்பட்ட 918 உள்துறை குழு அதிகாரிகளுள் திரு லோவும் ஒருவர். தற்போது அவர் ஜூரோங் காவல்துறைப் பிரிவில் தலைமைப் புலன் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
சிங்கப்பூரைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருக்கப் பங்காற்றிய அதிகாரிகளைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மானபங்கக் குற்றவாளியைப் பிடித்ததற்காக 4 அதிகாரிகளுக்கும் ஏற்னெவே குழு கௌரவிப்பு விருது வழங்கப்பட்டது.

