சிங்கப்பூரில் மூலாதார பணவீக்கம் பிப்ரவரி மாதத்திலிருந்து முதல் முறையாக சரிந்துள்ளது. இது பணவீக்கம் உச்சத்தைத் தொட்டு, சரிய தொடங்கியிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என்று பொருளியலாளர்கள் தெரிவித்தனர்.
மின்சாரம், எரிவாயு, சில்லறை விற்பனை, பொருள் மற்றும் சேவை விலைகளில் சிறுசிறு உயர்வுக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் பணவீக்கம் குறைந்துள்ளது.
தனியார் போக்குவரத்து, தங்குமிடம் தவிர்த்த மூலாதார பணவீக்கம், சிங்கப்பூர் இல்லங்களின் செலவுகளை மிகத் துல்லியமாகக் காட்டும். ஆண்டு அடிப்படையில் அது 5.1% குறைந்துள்ளது.
மேலும் இது செப்டம்பர் மாத விகிதமான 5.3%விடக் குறைவு, ஆகஸ்ட் மாத விகிதத்துடன் ஒத்திருக்கிறது.
அக்டோபர் மாத வாடிக்கையாளர் விலைக் குறியீடு அல்லது ஒட்டுமொத்த பணவீக்கம் 6.7% ஆனது. இது தனியார் போக்குவரத்து பணவீக்கம் சரிவு காரணமாக நிகழ்ந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. இந்த விகிதம் செப்டம்பர் மாத விகிதமான 7.5%விடக் குறைவு.
அக்டோபரின் மூலாதார பணவீக்கம் மற்றும் வாடிக்கையாளர் விலைக் குறையீடும் புளூம்பர்க் முன்னுரைத்த 5.3%, 7.1% எனும் விகிதங்களைவிடக் குறைவு.
தற்போதைய உள்நாட்டு தொழிலாளர் சந்தையின் இறுக்கம் குறைந்து, உலகளாவிய பணவீக்கம் மிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மூலாதார பணவீக்கம் அடுத்த சில காலாண்டுகளில் அதிகரித்து, 2023ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் மெதுவடையும் என்று ஆணையமும் அமைச்சும் நேற்று தெரிவித்தன.
முழு ஆண்டுக்கும் ஒட்டுமொத்த பணவீக்கம் சராசரி 6% ஆக இருக்கும். மூலாதார பணவீக்கம் 4% ஆக இருக்கும். இது ஆணையத்தின் செப்டம்பர் மாத முன்னுரைப்புடன் ஒத்திருக்கின்றன.
2023க்கு, ஒட்டுமொத்த பணவீக்கம் 5.5%க்கும் 6.5%க்கும் மாறாமல் இடைப்பட்டிருக்கும். மூலாதார பணவீக்கம் 3.5%க்கும் 4.5%க்கும் இடைப்பட்டிருக்கும். இந்த மதிப்பீடுகள் அடுத்த ஆண்டு உயரவிருக்கும் பொருள், சேவை வரியைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் பிரிவுகளையும் பார்க்கையில் தனியார் போக்குவரத்து பணவீக்கம்தான் அக்டோபரில் ஆக அதிகமாக 17.3%க்குச் சரிந்துள்ளது. செப்டம்பரில் அது 22.3%ஆக இருந்தது.

