தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்க மறந்துவிட்ட பயணி ஒருவர், பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஓட்டுநர் மீது பழிபோட்டு அவரைத் தாக்கினார். அந்தப் பயணிக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. டான் சுன் ஃபெங் என்ற அந்த 38 வயது பெண் பயணி, டவர் டிரான்சிட் நிறுவனத்தின் 34 வயது சோங் கொக் லியாங் எனும் பேருந்து ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரது முகத்தில் அறைந்தார்.
கடந்த மாதம் 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தோ பாயோ பேருந்து சந்திப்பு நிலையத்தில் பேருந்துச் சேவை எண் 143ல் ஏறினார். பின்னர் கம்போங் பாருவில் உள்ள கெப்பல் டிஸ்ரிபார்க்கில் அவர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தைத் தவறவிட்டார்.
பின்னர் அந்தப் பழியை பேருந்து ஓட்டுநர் மீது போட்டு, அவரை சரமாரி யாகத் திட்டியதுடன் அவரது முகக்கவசத்தை அகற்ற முயன்றுள்ளார்.

