பணிப்பெண்ணை பலமுறை துன்புறுத்திய மாதுக்கு இன்று வியாழக்கிழமை 10 மாத சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒருமுறை அந்தப் பணிப்பெண் மூச்சு திணறும் வரை அவரது கழுத்தை அந்த மாது நெரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பல முறை அப்பணிப்பெண்ணை துன்புறுத்தியாகவும் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு $5,076 இழப்பீடு வழங்கவும் அந்த 43 வயது மாதுக்கு உத்தரவிடப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மாதுக்கு நவம்பர் 10ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் நீதிமன்றத்தில் நிலைகுலைந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையில் அவர் நிதானத்துடன் காணப்பட்டார்.
அந்த மாது மீது ஆறு தாக்குதல் குற்றச்சாட்டுகளும் குற்றவியல் தாக்குதல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன. 2017 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அந்த மாது குற்றங்களைப் புரிந்தார்.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்தபோது அந்த மாதின் மகன் வயது குறைந்தவராக இருந்ததால், அந்த மாது மற்றும் அந்தப் பணிப்பெண் பற்றிய பெயர் விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.


