சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் 2023 சிங்கே ஊர்வலத்தில் 10,000 பேருக்கும் மேற்பட்ட மக்கள், ஓவி யர்கள், மேடைக் கலை கலைஞர்கள் கலந்துகொள்வர்.
சிங்கப்பூரில் பட்டாசுகளுக்குத் தடை நடப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கும் வகையில், 1972ஆம் ஆண்டு சிங்கே ஊர்வலம் நடப்புக்கு வந்தது.
ஆனால், காலப்போக்கில் அந்த ஊர்வலம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய பல கலாசார கொண்டாட்டமாகப் பரிணமித்து இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஊர்வலம் பிப்ரவரி 3, 4ஆம் தேதிகளில் நடக்கும்.
பெரிய அளவிலான வண்ண வண்ண மிதவைகள் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும். இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய தேசிய கல்விக் காட்சியும் இடம்பெறவிருக்கிறது.
"சிங்கே ஊர்வலம் என்பது எப்போதுமே நம்முடைய மக்களை மையமாகக் கொண்டது. பொதுமக்களை ஒன்று திரட்டி நமக்கே உரிய பல கலாசார, பன்முகத்தன்மையை போற்றி கொண்டாடுவது ஊர்வலத்தின் முக்கிய நோக்கம்," என்று மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் லிம் ஹோக் யு தெரிவித்தார்.
"சிங்கே 2023 ஊர்வலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும். சமூகத்தினர் பரந்த அளவில் ஈடுபாடு கொள்வதை அது உறுதிப்படுத்தும்.
"இளம் தலைமுறையினரும் அந்த ஊர்வலத்தில் அதிகமாக கலந்துகொண்டு சிங்கப்பூரர்களுக்கே உரிய கலாசாரத்தை எடுத்துக்காட்டுவர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
'எதிர்காலத்தைத் தழுவிக் கொள்வோம்' என்பது ஊர்வலத்தின் கருப்பொருளாக இருக்கும்.
நிகழ்காலத்தை பொக்கிஷமாகக் கருதி போற்றிப் புகழ்ந்து நாட்டின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும்படி எல்லா சிங்கப்பூரர்களையும் சிங்கே ஊர்வலம் கேட்டுக்கொள்ளும்.
உள்ளூர் ஓவியக் கலைஞர்கள் எட்டு பேரும் 480 இளையர்களும் சேர்ந்து கலைப் படைப்புகளை உருவாக்குவார்கள். அவை சமூக எழுச்சியையும் சிங்கப்பூரின் பல கலாசார பாரம்பரியத்தையும் புதுப்புது வழிகளில் வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டமுள்ளவர்கள் தங்கள் ஆடல், பாடல் திறன்களைக் காட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
சிங்கே 2023 ஊர்வலத்திற்கான நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் சிஸ்டிக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஊர்வலத்தைச் சிறந்த முறையில் கண்டுகளிக்க விரும்புவோருக்கான ஏ வகுப்பு சீட்டுகள் $28.50 முதல் $60 விற்பனையில் இருக்கும்.
மேல் விவரங்களுக்கு பொதுமக்கள் https://www.chingay.gov.sg என்ற இணையத்தளத்தை நாட லாம். சிங்கே ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் மேல் விவரங்களைப் பெறலாம்.

