ஆ. விஷ்ணு வர்தினி
முதன்முறையாக ஆஸ்திரேலியாவிலிருந்து கடந்த மாதம் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்ட டாஸ்மேனியன் டெவல் மிருகங்கள், நைட் சஃபாரியின் 'வாலபி டிரெயிலுக்கு' புதிதாக அறிமுகமாகியுள்ளன. க்ரம்பெட், ஸ்னிக்கர்ஸ், ஜெஸ்ஸி, பனினி ஆகிய நான்கு பெண் டாஸ்மேனியன் டெவல்களை மக்கள் இனி நைட் சஃபாரியில் காணலாம்.
ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் யூகலிப்டஸ் மரங்கள் சூழ, மேல் தளங்கள், பாறைகள், சிறு அருவிகள் முதலியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரு வெளிப்புறக் காட்சிக்கூடங்களிலும், பருவநிலை கட்டுப்படுத்தப்பட்ட இரு உட்புற காட்சிக்கூடங்களிலும் இந்த டாஸ்மேனியன் டெவல்கள் இருக் கின்றன. கறுப்பு நிறத்தில், ஏறக்குறைய பூனைகளின் அளவில் உள்ள இந்த மிருகங்கள் துள்ளிக் குதித்து ஓடுவதையும் சீறுவதையும் காணலாம்.
பன்னாட்டு ஒன்றியத்தின் இயற்கை பாதுகாப்புக்கான 'ரெட் லிஸ்ட்'டில் இடம்பெற்றுள்ள பைம்மாவின விலங்கு வகையான இந்த டாஸ்மேனியன் டெவல்கள் மெல்ல அருகி வருகின்றன.
'டெவில் ஃபேஷல் ட்யூமர் டிசீஸ்' எனப்படும் புற்றுநோய் பரவலால், இவ்விலங்குகளின் இனத்தொகை வெகுவாக குறைந்துள்ளது. 1996ஆம் ஆண்டிலிருந்து, ஏறக்குறைய 80 விழுக்காடு டாஸ்மேனியன் டெவல்கள் இந்நோய்க்கு இரையாகியுள்ளன.
இந்த நிலையை மாற்ற, ஆஸ்தி ரேலிய, டாஸ்மேனிய மாநில அரசாங்கத்தின் 'சேவ் தி டாஸ்மேனியன் டெவல்' திட்டம் செயல் படுத்தப்பட்டது. டாஸ்மேனியன் டெவல்களின் மீள்திறனை மேம் படுத்தும் நோக்கம் கொண்ட இந்த உலகளாவிய முயற்சியில் தற்போது இணைந்துள்ளது நைட் சஃபாரி.
டாஸ்மேனியன் டெவல்களை சிங்கப்பூருக்கு கொண்டு வரும் திட்டம் 2018லிலேயே தொடங்கியிருந்தாலும், கொவிட்-19 விதிமுறைகளால் அதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. 2019இல், நைட் சஃபாரியின் விலங்குப் பராமரிப்பு குழுவினர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்குப் பயணித்து, இவ்விலங்குகளைப் பராமரிப்பது குறித்து கற்றுக்கொண்டனர்.
டாஸ்மேனியாவுக்குச் சென்றோரில் ஒருவரான, மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் பைம்மாவின துணைப் பொறுப்பாளர் (curator) திரு ரசாக் ஜஃபர், டாஸ்மேனியன் டெவல்கள் பிற பைம்மாவின விலங்குகளைக் காட்டிலும் மிக உன்னிப்பான, தைரியமான மிருகங்கள் என குறிப்பிட்டார். "ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு குணநலன்கள் உண்டு. இரண்டு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இவற்றில், ஒன்றாக இருக்கும் ஜெஸ்ஸியும் பனினியும் ஆரம்பத்தில் சண்டையிட்டுக் கொண்டாலும் தற்போது அவை சுமூகமாகியுள்ளன," என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவின் அடையாளத்தில் பங்கு வகிக்கும் இந்த டாஸ்மேனியன் டெவல்களைப் பேணுவதற்கு, 'சேவ் தி டாஸ்மேனியன் டெவல்' திட்டத்துக்கு நிதியுதவி வழங்கி, மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் முதலியவற்றுக்கும் உதவி வருகிறது மண்டாய் வனவிலங்கு குழுமம்.

