சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இலவசமாக ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை (ஏஆர்டி) விநியோகிக்கும் பணி மீண்டும் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இந்த நான்காவது சுற்று விநியோகத்தில் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தலா 12 ஏஆர்டி கருவிகள் வழங்கப்படும்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இறுதியாண்டு விடுமுறைக் காலத்தில் சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும் என்பதால் கொவிட்-19க்கு தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்ளும்படி தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் கேட்டுக் கொண்டார்.
"உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்தாலோ, உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, எளிதில் பாதிக்கப்படக்கூடியர்களைச் சந்தித்தாலோ மறக்காமல் சோதித்துக் கொள்ளுங்கள்," என்று அவர் வலியுறுத்தினார்.
வரும் வாரங்களில் 'சிங்போஸ்ட்' நிறுவனம் வீட்டுக்கு வீடு இலவச கொவிட்-19 பரிசோதனைக் கருவி களை விநியோகிக்கும்.
கடந்த ஜூலை மாதம் கடைசியாக நாடு முழுவதும் இலவச ஏஆர்டி கருவிகள் விநியோகிக்கப்பட்டன. அப்போது, ஓமிக்ரான் எக்ஸ்பிபியால் தொற்று அதிகம் பரவியிருந்தது.
ஆண்டு இறுதியில் சிங்போஸ்ட்டுக்கு நெருக்கடி இருக்கும் என்பதால் அது ஏஆர்டி கருவிகளை விநியோகிக்கும் வரை பொறுமைக்காத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். சுகாதார அமைச்சு, தேவைப்படும்போது குறைந்த வருமானக் குடும்பங் களுக்கும் மாணவர்களுக்கும் இலவச ஏஆர்டி கருவிகளை விநியோகித்து வந்தது. இதில் சமூக சேவை அலுவலகங்கள், குடும்பச் சேவை நிலையங்கள் உள்ளிட்டவை பலனடைந்தன. இவை, தொடர்ந்து கூடுதல் ஏர்ஆர்டி கருவிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றன.

