ஃபிராங்ஃபர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்ட எஸ்ஐஏ விமானத்தில் இருந்த பயணிகள் சனிக்கிழமை சிங்கப்பூரில் தரையிறங்குவர்

ஃபிராங்ஃபர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்ட எஸ்ஐஏ விமானத்தில் இருந்த பயணிகள் சனிக்கிழமை சிங்கப்பூரில் தரையிறங்குவர்

25 Nov 2022 - 8:22 pm

1 mins read

ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் இருந்த பயணிகள் வேறு ஒரு விமானம் மூலம் நாளை சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட எஸ்கியூ317 விமானம், விமானி அறையில் ஏற்பட்ட காற்றழுத்தப் பிரச்சினை காரணமாக ஃபிராங்ஃபர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.

அந்த ஏர்பஸ் ஏ380 ரக விமானம், ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானம் பழுதுபார்க்கப்படுவதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் கூறினார். பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எஸ்கியூ9326 என்ற மாற்று விமானம், இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குச் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு ஃபிராங்ஃபர்ட் நேரப்படி பிற்பகல் 2.25 மணிக்கு அங்கு தரையிறங்கும்.

அங்கிருந்து அந்த விமானம் எஸ்கியூ9325 என்ற பெயரில் பிற்பகல் 3.55 மணிக்குப் புறப்பட்டு சிங்கப்பூரில் நாளை சனிக்கிழமை முற்பகல் 11.05 மணிக்குத் தரையிறங்கும்.

விமானத்தில் 379 பயணிகளும் 27 ஊழியர்களும் இருந்ததாக எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

அனைத்துப் பயணிகளுக்கும் உதவ ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பயணிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எஸ்ஐஏ கூறியது.