பணவீக்கத்தை ஈடுசெய்யும் அளவுக்கு சம்பளம் உயரவில்லை எனில் வேறு வேலைக்கு மாறுவது குறித்து 78% ஊழியர்கள் பரிசீலனை

பணவீக்கத்தை ஈடுசெய்யும் அளவுக்கு சம்பளம் உயரவில்லை எனில் வேறு வேலைக்கு மாறுவது குறித்து 78% ஊழியர்கள் பரிசீலனை

2 mins read
e8045694-0171-4bc7-ac2c-81ffd172423f
-

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்களில் 78 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சம்பள உயர்வு பணவீக்க அளவுக்கு இல்லை என்றால், அடுத்த ஆண்டு வேறு வேலைக்குத் தாவி விடுவது பற்றி பரிசீலிக்கப் போவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

'ராபர்ட் வால்ட்டர்ஸ்' என்ற ஊழியர் சேர்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் இது தெரியவந்து இருக்கிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளியல் மந்தம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை காரணமாக முதலாளிகள் தங்களுக்குச் சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று பல ஊழியர்கள் கோருகிறார்கள். சம்பளம் உயர்த்தப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இருந்தாலும் சிலரைப் பொறுத்தவரை முதலாளிகளிடம் பேரம் பேசி சம்பளம் உயர்வு பெறும் அளவுக்குத் திறமை தங்களுக்கு இல்லை என்று கருதுகிறார்கள். அல்லது சம்பள உயர்வு கோரிக்கையை விடுத்தால் வேலை போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

தனியார் போக்குவரத்துச் செலவு, குடியிருப்புச் செலவு ஆகியவற்றை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கம் அக்டோபர் மாதம் 5.1% ஆக இருந்தது. ஒட்டுமொத்த பணவீக்கம் 6.7% ஆக நிலவியது.

ராபர்ட் வால்ட்டர்ஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் அடுத்த ஆண்டு பற்றி நடத்தி இருக்கும் இந்த ஆய்வு முடிவுகள், நிறுவனங்களிடம் தேவைப்படும் அளவுக்கு ஆற்றல்மிக்க ஊழியர்கள் இல்லை என்று தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நிர்வாகம், மூத்த அதிகாரிகள் பதவிகளில் ஆற்றல்மிக்கவர்களை அமர்த்த அவை தடுமாறுகின்றன.

ஆகையால், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள தங்கள் முயற்சிகளை இரண்டு மடங்காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க ஊழியர்கள் அடுத்த ஆண்டு வேறு வேலைகளுக்குத் தாவும் பட்சத்தில் அவர்களுக்கு 15% முதல் 20% வரை சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் அந்த ஆய்வில் 105 நிறுவனங்களைச் சேர்ந்த 316 பேரிடம் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் கருத்து திரட்டப்பட்டது.

அடுத்த ஆண்டில் முக்கியமான எதிர்பார்ப்புகள் என்ன என்பது பற்றியும் சம்பள உயர்வு தொடர்பான கவலைகள் குறித்தும் வாழ்க்கைத் தொழில் மாற்றங்கள் பற்றியும் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வது குறித்தும் அவர்களிடம் கேட்கப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன.

இந்த ஆண்டில் தொழில்நுட்பத் துறையிலும் சுகாதாரப் பராமரிப்பு தொழில்துறையிலும் வேலை வாய்ப்புகளும் ஊழியர் சேர்ப்பும் குறிப்பிடத்தக்க அளவுக்குக் கூடின.

அடுத்த ஆண்டில் தொழில்நுட்பத் தேர்ச்சிகளுடன் கூடிய பட்டத் தொழிலர்களுக்குத் தொடர்ந்து அதிக தேவை இருக்கும். பல தொழில்துறைகளையும் சேர்ந்த முதலாளிகள் அவர்களை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு, சுற்றுச்சூழல், சமூக நிறுவன ஆளுமை ஆற்றல் உள்ளவர்களுக்கும் மனிதவள பட்டத் தொழிலர்களுக்கும் தேவை இருக்கும் என்றும் தெரிகிறது.