சமூக சேவைக் குழுக்களுக்கு உதவ $5 மில்லியன் நிதித் திரட்டு
அறப்பணி நிகழ்வு ஒன்றில் கொடையாளர்களும் நிறுவன முதலாளிகளும் $5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையால் சமூக சேவை குழுக்களும் அறநிறுவனங்களும் பயனைடையும். 'தி மஜுரிட்டி டிரஸ்ட்' (டிஎம்டி) என்னும் அறக்கட்டளை யின் நிதி உதவித் திட்டங்களுக்கு இந்த நன்கொடை உதவும். நினைவுத்திறன் குறைந்த முதியோர், மனநலப் பிரச்சினைகள் உள்ள இளையோர், வெளிநாட்டு ஊழியர்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளைக் கவனிக்கும் திட்டங் களுக்கு இந்த அமைப்பு ஆதரவு அளிக்கிறது. இந்த அமைப்பு 2018லிருந்து 220 சமூகக் குழுக்கள், லாப நோக்க மற்ற அமைப்புகள் மற்றும் அறநிறுவனங்களுக்கு உதவ $25 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளது. அதன்மூலம் 393,000 பேர் பயனடைந்துள்ளனர். வெவ்வேறு காரணங்களுக்காக ஒன்பது தனித்துவமான நிதியங்களின் மூலம் இந்த நிதியை டிஎம்டி அமைப்பு பகிர்ந்தளிக்கிறது.
'தி மஜுரிட்டி நைட்' என்னும் நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், மக்களால் தொடங்கப்பட்ட இந்த அறப்பணிக் குழுக்கள் வளரும்போது, அவற்றின் நம்பகத்தன்மையை இழக்காமல் இருப்பது முக்கியம் என்றார்.
குறைந்த வருமானக் குடும்பங்கள் மீது அதிபர் சவால் கவனம்
இவ்வாண்டு 82 சமூக சேவை நிறுவனங்கள் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க $15 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அதிபர் சவால் அறநிதி திரட்ட முயற்சி செய்கிறது. நேற்று முன்தினம் மாலை இஸ்தானாவில் நடைபெற்ற இரவு விருந்தில் தங்களின் நிதி திரட்டும் முயற்சிகளுக்காக 71 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அந்நிறுவனங்களில் ஃபார் ஈஸ்ட் அமைப்பும் ஷெங் சியோங் குழுமமும் அடங்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்த வருமானக் குடும்பங்கள் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டதாக இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார். பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலா ளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கான துறையில் வேலையின்மை விகிதம் 5.1 விழுக்காடாக உள்ளது. இது சென்ற ஆண்டு ஜூன் மாதத்தின் 3.4 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம். பராமரிப்பாளர்களுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார். தொற்றுநோயின் நீண்டகாலத் தாக்கத்தைத் எதிர்கொள்ள, குறைந்த வருமான குடும்பங்களுக்கு திறன்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தி சமூக முயற்சிகளை ஊக்குவிக்க இந்த ஆண்டு அதிபர் சவால் அறநிதி முயல்கிறது.

