கூடுகிறது நாடாளுமன்றம்: தெமாசெக் முதலீடு, 377A ரத்து, ஊழியருக்கு உதவிகள், கூட்ட நெரிசல் சமாளிப்பு பற்றி கேள்விகள்

கூடுகிறது நாடாளுமன்றம்: தெமாசெக் முதலீடு, 377A ரத்து, ஊழியருக்கு உதவிகள், கூட்ட நெரிசல் சமாளிப்பு பற்றி கேள்விகள்

2 mins read
ae36c921-2acd-46bd-99e1-74ba1ff66b48
-

நாடாளுமன்றம் வரும் திங்கள்கிழமை கூடுகிறது. அப்போது 'எஃப்டிஎக்ஸ்' என்ற நொடித்துப் போய்விட்ட மின்னிலக்க நாணய பரிவர்த்தனைச் சந்தையில் தெமாசெக் செய்திருக்கும் முதலீடு பற்றி விவாதிக்கப்படும்.

எஃப்டிஎக்ஸ் பரிவர்த்தனை சந்தையில் தான் செய்துள்ள US$275 மில்லியன் முதலீட்டை நீக்கிவிடப்போவதாக அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக் இந்த மாதத் தொடக்கத்தில் கூறியது.

எஃப்டிஎக்ஸ் அமைப்பு, நொடித்துப் போவதில் இருந்து பாதுகாப்பு கேட்டு மனுச் செய்து இருக்கிறது. அந்த விசாரணை முடிவு எப்படி இருந்தாலும் தான் அதில் செய்த முதலீட்டை தள்ளுபடி செய்துவிடப் போவதாக தெமாசெக் கூறியது.

தெமாசெக்கின் முதலீடு, எஃப்டிஎக்ஸ் சந்தை நொடிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்புவார்கள்.

மின்னிலக்க நாணய வர்த்தகம் தொடர்பான விதிமுறைகள் பற்றியும், மின்னிலக்க நாணய பரிவர்த்தனைச் சந்தைகள் நொடித்துப் போகும் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்தும் உறுப்பினர்கள் கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்கள்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஐந்து மசோதாக்கள் இரண்டாவது வாசிப்புக்கு வரும்.

தண்டனை விதித் தொகுப்பின் 377A பிரிவை ரத்து செய்வதற்கான மசோதாவும் அவற்றில் ஒன்று.

திருமண வரையறையைப் பாதுகாக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவும் இரண்டாவது வாசிப்புக்கு வரும். இந்த இரண்டு மசோதாக்களும் அக்டோபர் 20ஆம் தேதி மன்றத்தில் தாக்கலாயின.

தொழில்நுட்ப நிறுவனங்கள் அண்மையில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதனால் பாதிக்கப்படும் ஊழியர்கள் குறித்தும் அத்தகைய ஊழியர்களுக்கு அரசாங்கம் எப்படி உதவுகிறது என்பது பற்றியும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

பெரிய அளவில் மக்கள் கூடும் கூட்டங்களை நிர்வகிப்பதற்கான உத்திகள் பற்றியும் உறுப்பினர்கள் கேட்டு இருக்கிறார்கள்.

இதர நாடுகளில் அண்மையில் நடந்த கூட்ட நெரிசல் மரண சம்பவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றியும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.