அரசாங்கத்தில் உடனடித் தேவைகளை நிறைவுசெய்ய குறைந்தது 50 தொழில்நுட்பத் துறை வேலைகளில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். மென்பொருள் பொறியியல், உற்பத்திப் பொருள் நிர்வாகம், வடிவமைப்பு போன்ற துறைகளில் அந்த வேலைகள் உள்ளன.
'டெக் ஃபோர் பப்ளிக் குட்' எனும் திட்டத்தின்கீழ் இவ்வேலைகள் வழங்கப்படும். அரசாங்கத்தில் வேலைகளை நிரப்புவதற்கு அது தொடங்கியுள்ள புதிய திட்டம் அதுவென்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார். அது குறித்து அவர் லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்டார்.
அரசாங்கத்தில் உள்ள தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளனர் என்றார் அவர்.
கார் நிறுத்துமிடத்தில் காகிதச் சீட்டுகளுக்கான தேவை இல்லாமல் செய்த 'பார்க்கிங்.எஸ்ஜி' முறை, மோசடி அழைப்பு களிலிருந்து பாதுகாக்கும் 'ஸ்கேம்ஷீல்டு', கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான மின்பதிவு முறை ஆகியவை அவற்றில் சில.
மெட்டா, டுவிட்டர், ஷாப்பி போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்களில் ஊழியர்கள் வேலைஇழந்துள்ள நிலையில் அரசாங்கம், வேலைகள் குறித்து இவ்வாறு அறிவித்துள்ளது.
உதாரணத்துக்கு ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை நடத்தும் மெட்டா நிறுவனம் ஆள்குறைப்பு செய்துள்ளதால் சிங்கப்பூரில் குறைந்தது 50 ஊழியர்கள் வேலை இழந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு பதிலளித்த பொது அரசாங்கத் தயாரிப்புகள் அமைப்பின் பேச்சாளர், தரவுப் பொறியியல், தரவு அறிவியல், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் துறைகளிலும் அரசாங்க ஊழியர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தைப் பொது அரசாங்கத் தயாரிப்புகள் அமைப்பும் அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகமும் சேர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
பொது அரசாங்கத் தயாரிப்புகள் அமைப்பிலேயே தொழில்நுட்பத் துறையில் 50க்கும் அதிகமான வேலைகளில் ஊழியர்கள் தேவைப் படுவதாகப் பேச்சாளர் கூறினார்.
அரசாங்கத்தில் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கு அதிகரித்து வரும் தேவையை நிறைவேற்ற திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.

