சாதாரண நிலைத் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்ய உதவிய துணைப்பாட நிலையத்தின் முன்னாள் முதல்வருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனையை தொடங்குவதற்காக போ யுவான் நியே, 56, புதன்கிழமை நீதிமன்றத்தில் தம்மை ஒப்படைக்கத் தவறியதை அடுத்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
போ தற்போது எங்கிருக்கிறார் என்று தமக்குத் தெரியவில்லை என்று அவருக்காக வழக்காடிய வழக்கறிஞர் பீட்டர் ஃபெர்னாண்டோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
கடந்த புதன்கிழமை போ நீதிமன்றத்துக்கு வராததை அடுத்து திரு ஃபெர்னாண்டோ அந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சாதாரண நிலைத் தேர்வில் ஆறு மாணவர்கள் முறைகேடு செய்வதற்கு போ உதவினார். அதன் தொடர்பிலான 27 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று 2020ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது.
'சியூஸ் எட்யூகேஷன் செண்டர்' எனும் துணைப்பாட நிலையத்தில் போ முதல்வராகவும் அவரது உறவுக்காரப் பெண் ஃபியோனா லிம் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர். முறைகேடு செய்ய சதித் திட்டம் தீட்டிய 27 குற்றச்சாட்டுகள் லிம் மீதும் சுமத்தப்பட்டது. அவருக்கு மூவாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் அந்த வழக்கில் மேல்முறையீடு செய்திருந்தனர். நேர்மையற்று உண்மையை மறைத்தது என்ற சொற்றொடரில் நேர்மையின் பொருள் குறித்து அவர்களின் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வாதிட்டனர். ஆனால் அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாத மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வழக்கை இவ்வாரம் தள்ளுபடி செய்தது.
சாதாரண நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பலதுறைத் தொழில்கல்லூரிகளுக்குச் செல்ல ஆறு மாணவர்களுக்கு உதவுவதற்காக, போவுக்கு ஒரு மாணவருக்கு $8,000 வழங்கப்பட்டிருந்தது.
போ, லிம் இருவரும் துணைப்பாட ஆசிரியாகப் பணியாற்றிய டான் ஜியா யான் என்பவரும் ஒவ்வொரு தேர்வுக்கு முன்னரும் மாணவர்கள் தங்கள் உடலில் தொலைத்தொடர்புச் சாதனங்களைக் கட்டிக் கொள்ள உதவினர்.
அதே 2016ஆம் ஆண்டு தனியார் மாணவராக அதே தேர்வுகளை எழுதிய டான், தேர்வுத்தாள்களை கைப்பேசியின் மூலம் நேரடியாக துணைப்பாட நிலையத்தில் உள்ளவர்களுக்குக் காட்டினார்.
போ, லிம் உள்ளிட்டோர் கேள்வி களுக்கான சரியான விடைகளைக் கண்டுபிடித்து தொடர்புச் சாதனங் களின் மூலம் அவற்றை மாணவர்களுக்கு தெரிவித்தனர்.
அவர்கள் சொல்லச்சொல்ல மாணவர்களும் தேர்வெழுதினர்.
மூன்று தேர்வுகளுக்கு இப்படியே நடந்தது. ஆனால் தேர்வுக் கண்காணிப்பாளர் ஒருவர், மின்னியல் சாதனத்தின் சத்தத்தையும் குரல் களையும் கேட்டதால் அவர்களின் மோசடி வெளிப்பட்டது.
போ தான் இந்தத் திட்டத்தைத் தீட்டினார் என்று அப்போது கூறப்பட்டது. போவுக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகளில் வழக்கு இன்னமும் விசாரணைக்கு வரவில்லை.

