பிள்ளைகளைத் தத்தெடுத்து அவர்களை அன்புடன் பராமரித்து ஆதரவு அளித்து எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் தியாக உணர்வுடன் செயல்படும் பெற்றோரைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸூல்கிஃப்லி பாராட்டினார்.
"பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அன்பான, பாதுகாப்பான சூழ்நிலையை உங்கள் வீடுகளில் அவர்களுக்கு உருவாக்கித் தாருங்கள் என்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தியாக உணர்வுடன் அத்தகைய பெற்றோர் செயல்படுகிறார்கள்.
"அன்றாட வாழ்க்கையில் தேவைக்கு ஏற்றபடி அவர்கள் மாறிக்கொண்டு பல்வேறு சரியாக்கங்களை செய்துகொள்கிறார்கள். தாங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி செம்மையாக அவர்களைப் பேணி வளர்க்கிறார்கள்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் தத்துப்பிள்ளைகள், இளைஞர்களுக்கான வருடாந்திர விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில் தத்தெடுக்கப்பட்ட 27 சிறார்கள் அங்கீகரித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.
கல்வி, குணநல மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாடு போன்ற துறைகளில் இடைவிடாமல் பல சாதனைகளைப் புரிந்துள்ள தத்துப் பிள்ளைகளும் இளையர்களும் அவர்களில் அடங்குவர்.
இதர 25 சிறார்கள் பாராட்டு விருதுகளைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், தத்தெடுத்துக்கொள்ளப்படும் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான ஊக்கத்தொகை கடந்த செப்டம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டதைச் சுட்டினார்.
குழந்தைப் பராமரிப்பு, மாணவர் பராமரிப்பு மானியங்கள், குழந்தைப் பராமரிப்பு விடுமுறை போன்ற இதர ஆதரவு செயல்திட்டங்களும் நடப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் பெற்றோர்கள் இப்போது $1,100 மாத ஊக்கத்தொகையைப் பெறுகிறார்கள். சிறப்பு உதவி தேவைப்படும் சிறார்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு $1,500 ஊக்கத்தொகையாகக் கிடைக்கிறது.
இப்போது ஏறத்தாழ 550 சிறார்கள் தத்தெடுத்து கொள்ளப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சுமார் 20 விழுக்காட்டினர், சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகள்.
சிங்கப்பூரில் 2021ல் பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 595 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2020ல் 564 ஆக இருந்தது.
பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் குடும்பங்கள், அந்தப் பிள்ளைகளைப் பேணி வளர்க்க ஏதுவான குடும்ப சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டும்.
அத்தகைய பிள்ளைகள் ஏற்கெனவே அலட்சியப்படுத்தப்பட்டவர்களாக அல்லது கைவிடப்பட்டவர்களாக அல்லது கொடுமைப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
தத்தெடுத்து பராமரிப்பு என்பது தற்காலிக ஏற்பாடாகவே இருக்கிறது. அத்தகைய பிள்ளைகளை முடிந்தால் கடைசியில் அவர்களுடைய குடும்பத்துடன் மீண்டும் ஐக்கியப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
அமைச்சர்: தியாக உணர்வுடன் பிள்ளைகளை அன்புடன் பாதுகாக்கிறார்கள்