சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் 125 கிலோகிராம் எடை தூக்கி தனிப்பட்ட சாதனை படைத்துள்ளார். முன்னதாக திரு சண்முகம் 105 கிலோகிராம் எடை தூக்கி தனிப்பட்ட சாதனை படைத்தார். அது பற்றி அவர் பதிவேற்றம் செய்த காணொளி பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இன்று இடம்பெற்ற சொங் பாங் உடற்பயிற்சி நிகழ்ச்சியில் அமைச்சர் தம்முடைய தனிப்பட்ட சாதனையை முறியடித்தார்.
125 கிலோகிராம் எடையைத் தூக்குவதற்கு முன், 63 வயதான அமைச்சர் குறைவான எடைகளை முதலில் தூக்கி தம்மை தயார்படுத்திக்கொண்டார். 90, 100, 105, 110 கிலோகிராம் என்று படிப்படியாக எடைகள் அதிகரிக்கப்பட்டன. இடையிடையே திரு சண்முகம் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
இறுதியாக, அவருடைய பயிற்றுவிப்பாளர் எடையை 125க்கு அதிகரித்தார். சுற்றியிருந்தவர்கள் ஊக்குவிக்க, அமைச்சர் 125 கிலோகிராம் எடையைத் தூக்கினார். எடையைத் தூக்குவது எலும்பு, தசை ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று கூறிய அமைச்சர், இது தற்பெருமைக்காக செய்யவில்லை என்று குறிப்பிட்டார். அனைவரும் உடல்நலத்தோடு இருப்பது அவசியம் என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.
அமைச்சரின் தொகுதியான நீ சூன் குழுத்தொகுதியில் "Chong Pang Fitness Fiesta" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

