ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியில் 2007ஆம் ஆண்டு முதல் 2008ஆம் வரை பயின்ற ஹரேஷ், உயிரியல், கணிதம், தமிழ் இலக்கியம், வேதியியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.
படிப்பில் தேர்ச்சி பெற்றதோடு தமிழ்மொழி, நடனம் மற்றும் விவாத மன்றத்தின் தலைவராகவும் சேவையாற்றினார்.
தற்பொழுது அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் குடும்பநல மருத்துவராக இருக்கிறார்.
கல்லூரியில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் புத்தகத்தில் இருந்ததை மட்டும் கற்பிக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளையும் கற்பித்துள்ளனர் என்றார் டாக்டர் ஹரேஷ்.
தான் இன்று ஒரு மருத்துவராகக் பணிபுரிவதற்கு தமிழ் இலக்கியம் ஒரு முக்கியக் காரணம் என்றார் ஹரேஷ்.
தனது மருத்துவ நேர்காணலில் தான் படித்த ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதச் சொன்னபோது, 'ஆசிய ஜோதி' புத்தகத்தைப் பற்றி எழுதியதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பொழுது ஒரு மருத்துவராக அவரது வாழ்க்கை பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தாலும் அதை அவர் விரும்பிச் செய்து வருவதால் இது அவருக்கு ஒரு பாரமாகவே தெரியவில்லை என்று பகிர்ந்துகொண்டார்.
தான் 'டிஎல்டிடிஎஸ்' தலைவராக இருந்தபோது தன் ஆற்றலில் பலரும் நம்பிக்கை இல்லாமல் இருந்ததாக நினைவுகூர்ந்தார் ஹரேஷ்.
இருப்பினும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் தன் பொறுப்புகளைச் சிறப்பாக ஆற்றுவதில் கவனம் செலுத்தினார்.
தமிழ்மொழியின் மீது தான் கொண்ட ஆர்வம், தனக்கு மட்டும் பயனளிக்காது தன் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றைத் திறமையாக வழிநடத்தியும் உள்ளார் அவர்.
"இன்றைய கல்லூரி வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் கல்விக் கற்றலையும் இணைப்பாட நடவடிக்கைகளையும் சரிசமமாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
"நேரத்தைச் சரியாக வகுத்து அதைப் பின்பற்றினால் இவை இரண்டையும் நாம் சிறப்பாக ஆற்ற முடியும்," என்று திரு ஹரேஷ் கூறியது இன்றைய மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சொற்களாகும்.
மேலும், கல்லூரி நாட்களில் நண்பர்களின் துணை மிகவும் அவசியம் என்றும் மருத்துவர் ஹரேஷ் கூறுகிறார்.
பள்ளியிலும் தமிழ் வகுப்பிலும் அவர் பெற்ற நண்பர்கள் இன்றுவரை அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என்றார் அவர்.
பேட்டி கண்ட மாணவர்கள்: மஹாலெட்சுமி, அகிலேஷ் ராம்

