ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தான் பயின்ற காலத்தில் நேர நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துகொண்டதாக முன்னாள் மாணவி மரியா இமாகுலேட் எங்களிடம் கூறினார். அவர் 'டிஎல்டிடிஎஸ்' (Tamil Language Dance & Debate Society) எனும் இணைப்பாட நடவடிக்கையில் 2019ஆம் ஆண்டு தலைவியாகச் செயல்பட்டார்.
அதன் மூலம், தனது தொடக்கக் கல்லூரி முதலாம் ஆண்டில் 'சுரபி' என்ற விவாதப் போட்டியிலும் இரண்டாம் ஆண்டில் 'சொற்சிலம்பம்' என்ற தேசிய அளவிலான போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்குப் பல பொறுப்புகள் இருக்கக்கூடிய சூழலில் மரியாவுக்கும் கல்வி சார்ந்த வகையிலும் தலைமைத்துவம் தொடர்பாகவும் பொறுப்புகளும் தேடிவந்தன. படிப்பில் கவனம் செலுத்தும் அதே சமயத்தில் போட்டிகளுக்கும் தயார் செய்ய வேண்டும்.
அதனால் ஓய்வு நேரங்களிலும் விவாதப் போட்டிக்கான உரைகளை மனப்பாடம் செய்ததுடன் பள்ளி முடிந்த பிறகு விவாதப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் பயிற்சிகளையும் ஆசிரியர் உதவியோடு மேற்கொண்டதாக மரியா குறிப்பிட்டார்.
விவாதம் செய்வதில் மட்டும் மரியா சிறந்து திகழவில்லை. நடனத்திலும் தனது ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. சொற்சிலம்பம் போட்டிக்கு ஒரு புறம் தயார் செய்துகொண்டிருந்த அதேவேளையில் சிங்கப்பூர் இளையர் விழாவின் நடனப்போட்டியிலும் அவர் பங்கேற்றார்.
அவருக்கு நடனப் பின்னணி இல்லாததால், மற்றவர்களைவிட நடனத்திற்காக கூடுதல் மணிநேரம் செலவிட வேண்டியிருந்தது. விவாதப் போட்டி, நடனப் பயிற்சிகள் ஆகியவற்றால் படிப்பதற்கு நேரம் சற்றுக் குறைவாகவே இருந்ததென அவர் கூறினார். இருப்பினும் தடைகளைப் பொருட்படுத்தாமல் அவற்றைச் சமாளிக்கக்கூடிய திறனோடு தன் பணிகளைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற சிந்தனையும் தனக்குக் கைகொடுத்ததாகத் தெரிவித்தார்.
தற்போது தேசியக் கல்விக் கழகத்தில் தமிழாசிரியர் ஆவதற்காக பயின்று வருகிறார் மரியா. தொடக்கக் கல்லூரியில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாடத்தைத் தனது விருப்பப்பாடமாக எடுக்காதது தனக்கு வருத்தம் அளித்தாலும் தனது இணைப்பாடத்தின்வழி தமிழ்மொழியோடும் கலாசாரத்தோடும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறினார்.
இதுவே அவரது மொழித் திறமையை வளர்க்கப் பெரிதும் உதவியது என்றும் தன்னுள் இருந்த மொழிப்பற்றினை மேன்மேலும் வளர்க்க அடித்தளமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார் அவர்.
இன்றைய தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை வெறும் பாடமாகக் கருதாமல் அதனோடு தங்களுக்கு இருக்கும் உறவையும் தங்களது மரபையும் நன்கு அறிந்து தமிழில் உரையாட வேண்டும் என்று மரியா அறிவுறுத்துகிறார்.
தமிழ் ஆசிரியராவதன் வழி மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்த விரும்பும் அவர், தொடக்கக் கல்லூரிக்கு செல்ல விரும்பும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்.
மாணவர்கள் தமிழ்மொழியை ரசித்துக் கற்க வேண்டும் என்பதைத் தான் மனதில் கொண்டு தன் தொடக்கக் கல்லூரி அனுபவத்தின் உதவியோடு எதிர்காலத்தில் ஆசிரியர் பணியை மேலும் சிறப்பாக ஆற்ற இலக்கு கொண்டுள்ளதாகக் கூறி மரியா நேர்காணலை நிறைவுசெய்தார்.
பேட்டி கண்ட மாணவர்கள்: சௌம்யா, சஹானா

