ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தான் பயின்ற நாள்களில், தனது தமிழ் பற்றை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் அமைந்ததெனக் கூறினார் முன்னாள் மாணவர் யுகேஷ் கண்ணன்.
'சுரபி', 'சொற்சிலம்பம்' போன்ற தமிழ்மொழி சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்ற அக்கல்லூரி மாணவர்களுள் அவரும் ஒருவர்.
பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் வாய்ப்பைத் தன் ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன் தந்த ஊக்குவிப்பும் தனது உழைப்பும் ஏற்படுத்தித் தந்ததாக நினைவுகூர்ந்தார் யுகேஷ். உயர்நிலைப்பள்ளியில் கிடைக்காத வாய்ப்புகளைத் தொடக்கக் கல்லூரியில் பெற்றார் அவர்.
'சொற்சிலம்பம்' விவாதப் போட்டியில் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கேற்று 2019ஆம் ஆண்டில் பள்ளி நண்பர்களின் உதவியோடும் தன் விடாமுயற்சியாலும் தீவிரப் பயிற்சிகளுடன் வெற்றிக் கிண்ணத்தை வென்றார்.
போட்டியின் இறுதிச்சுற்றின்போது, தனக்குத் தொண்டைவலி ஏற்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் தன் குழுவினரின் ஆதரவோடு போட்டியில் வெற்றி பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் அவர்.
"என் தொடக்கக் கல்லூரி படிப்புக்கு மட்டும் செலவு செய்யுங்கள். அதற்குப் பின் நானே என் படிப்பிற்கான செலவைச் சமாளிக்கிறேன்," என்று உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது யுகேஷ் தன் தந்தையிடம் கூறினார்.
தான் கூறியதை நிறைவேற்றும் வகையில் தனது மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெறப் பல இடங்களில் நேர்காணலுக்காக பதிவு செய்தும் வந்தார் அவர். ஒருநாள் யுகேஷ் தன் கைத்தொலைபேசியில் 'எஸ்பிஎச்' வழங்கும் உபகாரச் சம்பளம் பற்றிய விளம்பரத்தைக் கண்டார்.
தனது லட்சியத்தை அடைவதற்காக அந்த உபகாரச் சம்பளத்தைப் பெறப் பதிவு செய்து, சில நாள்களுக்குப் பிறகு தமிழ் முரசு ஏற்பாடு செய்திருந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். தமிழ் முரசுக்கான முதல் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற பெருமை இவரைச் சாரும்.
யுகேஷ் தற்போது தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் படித்து வருகிறார். தான் இன்று இந்த நிலைக்கு முன்னேறியதற்கும் தமிழ்மொழியில் தன் புலமை அதிகரித்ததற்கும் தன் தொடக்கக் கல்லூரி நாள்களே பெரும் உறுதுணையாக இருந்துள்ளன என்றார் யுகேஷ்.
பேட்டி கண்ட மாணவர்கள்: நூருல் ஆஃபியா, சௌந்தரபாண்டியன் ஸ்ரீராம்

