டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்குமான சிறந்த நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பயணிகள் ஏதாவது பொருள்களை விட்டுச்சென்றனவா என்று பார்க்கும்படி ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயும்.
டாக்சி மற்றும் வாடகை கார் நிறுவனங்களுடன் சேர்ந்து நிலப் போக்குவரத்து ஆணையம் மறுஆய்வு குறித்து பணியாற்றி வருவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இன்று திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்னர், டாக்சியின் பின் இருக்கையில் பயணி விட்டுச்சென்ற பணப்பையைத் தேடிப் பார்க்காத டாக்சி ஓட்டுநரை நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்தது. ஆனால் அவரது நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய டாக்சி சங்கமும் மேல்முறையீடு செய்ததை அடுத்து எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.
அந்த விதிமுறையின் நோக்கம் தண்டிப்பது அல்ல என்றும் மாறாக நன்னடத்தையை ஊக்குவிப்பதே என்றார் டாக்டர் கோர்.


