இவ்வாண்டு ஜூலை முதல் நவம்பர் வரை 1,270 சிங்கப்பூர்வாசிகள் வேலையிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இவ்வாண்டு முற்பாதியில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 260 சிங்கப்பூர்வாசிகளைவிட இது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும்.
தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு குறித்து நேற்று ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குப் டாக்டர் டான் நேற்று பதில் அளித்தார்.
சிங்கப்பூரில் மெட்டா, கோட்டூ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட் குறைப்பு செய்தன.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட 1,270 ஊழியர்களில் பத்து பேரில் எட்டு பேர், விற்பனை, விளம்பரம் போன்ற தொழில்நுட்பம் சாராத பணிகளைச் செய்தனர் என்று அவர் கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு வரை ஜூன் வரை 790 சிங்கப்பூர்வாசிகள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

