செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
121e4f17-fd12-4e7d-81f9-aa04e34eb146
-

டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள்: நடைமுறைகள் மறுஆய்வு

டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்குமான சிறந்த நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பயணிகள் ஏதாவது பொருள்களை விட்டுச்சென்றனரா என்று பார்க்கும்படி ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயும்.

டாக்சி மற்றும் வாடகைக் கார் நிறுவனங்களுடன் சேர்ந்து நிலப் போக்குவரத்து ஆணையம் மறுஆய்வு குறித்து பணியாற்றி வருவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்னர், டாக்சியின் பின் இருக்கையில் பயணி விட்டுச்சென்ற பணப்பையைத் தேடிப் பார்க்காத டாக்சி ஓட்டுநரை நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்தது. ஆனால் அவரது நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய டாக்சிகள் சங்கமும் மேல்முறையீடு செய்ததை அடுத்து எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த விதிமுறையின் நோக்கம் தண்டிப்பது அல்ல என்றும் நன்னடத்தையை ஊக்குவிப்பது என்றும் திருமதி கோர் நேற்று கூறினார்.

நொடித்துப் போவதை தனியார் நிறுவனங்கள் கையாள சட்டத்திருத்தம்

பொதுநலன் சார்ந்தவற்றைத் தவிர மற்ற அனைத்து நொடிப்புகளையும் வரும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், பொறுப்பாண்மை நிறுவனங்கள், வழக்கறிஞர் நிறுவனங்கள் போன்ற தனியார் துறையினர் கையாளக் கூடும். அதன் தொடர்பிலான நொடித்துப் போதல், மறுசீரமைப்பு, கலைப்புச் சட்டத்தில் சட்டத்திருத்தத்தை சட்ட அமைச்சு நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

தற்போது கடன் கொடுக்கும் அமைப்புகள் மட்டுமே, தங்கள் சார்பில் நொடித்துப் போவதற்கான விண்ணப்பத்தைக் கையாள தனியார் தரப்புகளை நியமிக்க வேண்டும். சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால், நொடித்துப் போவதைக் கையாள கடன் கொடுத்த எல்லாரும் தங்கள் சார்பில் தனியார் நிறுவனங்களை நியமிக்கலாம்.

கடன் கொடுத்தவர்கள் தனிப்பட்ட கடனைத் திரும்பப் பெறவோ, கடனாளிகளை கடன் தந்தவர்களிடமிருந்து பாதுகாக்கவோ அரசாங்க வளங்கள் பயன்படாமல், அவற்றை இன்னும் மேம்பட்டு நிர்வகிக்க மாற்றம் உதவும் என்று சட்ட அமைச்சு கூறியது.

பேருந்து ஓட்டுநர்களைத் துன்புறுத்தும் பயணிகளுக்குக் கடும் தண்டனை

இவ்வாண்டு இதுவரை பேருந்துப் பயணிகள் ஓட்டுநர்களைத் துன்புறுத்திய 27 சம்பவங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

கடந்த 2021ல் அத்தகைய 35 சம்பவங்களையும் 2020ல் 50 சம்பவங்களையும் பற்றி பொதுச் சேவை நடத்துநர்கள் தெரிவித்ததாக திரு சீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2019ல் 52 துன்புறுத்தல் சம்பவங்களும் 2018ல் 18 சம்பவங்களும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

டெஸ்மண்ட் சூ, (தெம்பனிஸ் குழுத்தொழுதி), மெல்வின் யோங், (ராடின் மாஸ்) இருவரும் கேட்ட கேள்விகளுக்கு திரு சீ பதில் அளித்தார்.

பேருந்து ஓட்டுநர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்ததை அடுத்து இருவரும் அது பற்றி கேட்டிருந்தனர். அத்தகைய நடத்தை பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் அவ்வாறு பேருந்து ஓட்டுநர்களைத் துன்புறுத்தும் பயணிகளுக்கு சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகத் தலைமைத்துவம் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும்

பல்கலைக்கழக மாணவர்கள் தங்குவிடுதிகளுக்கு அல்லாடுவது, வளாகங்களில் பேருந்துச் சேவைகள் நேரம் தவறுவது, பல்கலைக்கழக வளாகங்களில் ஹலால் உணவு போதாமல் இருப்பது போன்றவை பிரச்சினைகளின் அறிகுறி என்று அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத் தலைமைத்துவத்திடையே பொறுப்புணர்வு போதாது இருக்கலாம் என்றும் அது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் உயர்கல்வி நிலையங்களில் தலைமைத்துவத்தின் பொறுப்புணர்வும் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ஊழியர்களிடமும் மாணவர்களிடமும் தலைவர்கள் கூடுதல் பொறுப்புடன் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.