கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி, இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஓட்டுநருக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து எட்டு ஆண்டு கள் அனைத்துவிதமான வாகனங்கள் ஓட்டவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
2021 ஏப்ரலில் தீவு விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மொத்தம் எட்டுப் பேர் காயம் அடைந்தனர். வேலுச்சாமி பிரபு, 38 கவனக்குறைவாக லாரியை ஓட்டியதால் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதியது.
லாரியின் பின்புறத்தில் இருந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 33 வயது ஹுசேன் டோஃபலும் இந்திய நாட்டைச் சேர்ந்த 28 வயது சுகுணன் சுதேஷ்மனும் இறந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த வேலுச்சாமி, 2005ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று காலை 5.45 மணிக்கு ஹுசேன் டோஃபல், சுகுணன் சுதேஷ்மன் உட்பட 17 பேரை லாரியில் ஏற்றிக் கொண்டு அவர் சென்றார்.
அப்போது, சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையின் ஓரமாக பழுதடைந்த கனரக லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாலையின் 5வது தடத்தில் கனரக லாரி நீண்டு இருந்தது. அந்த வழியாக லாரியை ஓட்டி வந்த வேலுச்சாமி, விரைவுச் சாலையிலிருந்து வெளியேறு வதற்காக நான்காவது தடத்திலிந்து 5வது தடத்திற்கு மாறினார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த கனரக லாரியை அவர் கவனிக்கத் தவறி விட்டார். கனரக லாரி மீது மோதுவதைத் தவிர்க்க வேலுச்சாமி முயற்சி செய்தாலும் லாரியின் இடது பக்கம் கனரக லாரி மீது மோதியது.
இதில் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஹுசைனும் சுகுணனும் படுகாயம் அடைந்தனர். ஹுசைன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மாண்டார். சுகுணன் மறுநாள் காலமானார். மேலும் எட்டுப் பேர் காயம் அடைந்தனர்.

