நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவின்கீழ் வைக்கப்பட்டிருந்த 35 வயது வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை எட்டி உதைத்து அவரது உதட்டை சிகரெட்டால் சுட்டு இருக்கிறார். இதனால் 29 வயது பெண்ணுக்கு மார்பில் சிராய்ப்புக் காயமும் கீழ் உதட்டில் வடுவும் ஏற்பட்டது.
ஆல்ஃபிரட் லிம் சிங் யூவான் லிம், 25, ஒரு பெண்ணைத் தாக்கி, காயம் விளைவித்த குற்றச்சாட்டுகளை நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் உள்ள குற்றவாளிகள் ஆறு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அதிகாரியின் மேற்பார்வையில் இருக்க வேண்டும்.
இதை மீறுவோருக்கு முன்பு விதிக்கப்பட்ட தண்டனையுடன் தற்போது செய்த குற்றத்திற்கும் தண்டனை விதிக்கப்படும்.
லிம், 21 மாதம் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
2021 டிசம்பர் 2ஆம் தேதி நடந்த சம்பவத்தின்போது புக்கிட் பாஞ்சாங், கங்சா ரோட்டில் தனது வீட்டின் படுக்கை அறையில் அந்தப் பெண்ணுடன் அவர் இருந்தார். அன்று இரவு விருந்துக்கு தோழி களையும் ஆண் நண்பரையும் அந்தப் பெண் அழைத்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த லிம் அந்தப் பெண்ணை கீழே தள்ளி மார்பில் எட்டி உதைத்துள்ளார். தப்பிக்க முயற்சி செய்த பெண்ணை சிகரெட்டால் சுட்டிருக்கிறார்.
வரும் ஜனவரி 9ஆம் தேதி லிம்முக்கு தண்டனை விதிக்கப்பட விருக்கிறது.

