வேலையிடத்தில் காயமடைந்து இழப்பீடு கோருவோருக்கு வழங்கப்படும் தொகையை நிர்ணயிக்கும் உரிமை காப்புறுதி நிறுவனங்களுக்குத் தரப்படக்கூடாது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு நேர்ந்தால் அது குறுகிய கால வேலை ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கும் நியாயமான தீர்வு கிடைப்பதை உறுதி செய்யாது என்றார் அவர்.
தற்போது நடப்பில் இருக்கும் அணுகுமுறையை மேம்படுத்துவதன் மூலம் வேலையிடக் காய இழப்பீடு சட்டத்துக்கு நிகரான பாதுகாப்பை குறுகிய கால வேலை ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கலாம் என்று பொது காப்பீட்டுச் சங்கம் முன்வைத்துள்ள பரிந்துரையை டாக்டர் கோ ஏற்க மறுத்தார்.
"முன்வைக்கப்பட்ட பரிந்துரை சாத்தியமானதாக இருந்தால் அதை ஏன் காப்புறுதி நிறுவனங்களும் குறுகிய கால வேலை ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களும் வேலையிடங்களில் ஊழியர்கள் மாண்டபோது பரிந்துரை செய்யவில்லை," என்று டாக்டர் கோ கேள்வி எழுப்பினார்.
"தற்போது நடப்பில் உள்ள கொள்கைகள் மீது பொது காப்பீட்டுச் சங்கத்துக்கு நம்பிக்கை இருக்கிறது.
"எனவே, வேலையிடக் காய இழப்பீடு சட்டத்துக்கு நிகரான இழப்பீட்டுத் தொகையைத் தற் போதைய கொள்கைகளைக் கொண்டு அச்சட்டத்துக்கு நிகரான இழப்பீடு தருவது தொடர்பாக குறுகிய கால வேலை ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுடன் சங்கம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார் அவர்.

