சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருவதாலும் நாள்பட்ட நோய்கள் அதிகரிப்பதாலும் மருத்துவமனைக்கு வெளியிலும் நோயாளிகளின் நல்வாழ்வின் மீது கவனம் செலுத்துவது முக்கியம்.
இந்த அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் தனியார் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நோயாளிகளின் சமூக, மனநல, உடல்நலப் பிரச்சினை
களைக் கையாள அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் குடும்பநல மருத்துவர் கல்லூரி, சிங்கப்பூர் மருத்துவக் கல்விக்கழகம் போன்ற நிபுணத்துவ அமைப்புகளுடன் சிங்ஹெல்த் சமூக மருத்துவமனை குழுமம் ஆலோசனை நடத்தி வருவதாக குழுமத்தின் கல்வி மற்றும் சமூக பங்காளித்துவப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி இணைப் பேராசிரியர் லீ கெங் ஹோக் கூறினார்.
முதலாவது ஆசிய-பசிபிக் சமூக பரிந்துரை மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று அவர் உரையாற்றினார். கிட்டத்தட்ட 1,000 பேர் பங்கேற்ற இம்மாநாட்டில் உலகின் 20 நாடு
களைச் சேர்ந்த நிபுணர்களோடு உள்ளூர் நிபுணர்களும் கலந்துகொண்டனர். உலக சுகாதார நிறுவனம், பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை அமைப்பு போன்றவற்றின் சுகாதார நிபுணர்களும் மாநாட்டிற்கு வந்திருந்தனர்.
சுகாதாரத்தை ஆதரிக்கக்கூடிய சமூக, சுற்றுச்சூழலுக்கான இந்த நடவடிக்கை சமூகப் பரிந்துரை என்றும் குறிப்பிடப்படுகிறது. செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட 'ஹெல்தியர் எஸ்ஜி' என்னும் நோய்க்கு முந்தியப் பராமரிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து இந்த யோசனை பிறந்தது.
சமூக மருத்துவமனைகளின் நோயாளிகள் குறித்துப் பேசிய பேராசிரியர் லீ, "அதிக சவாலை எதிர்நோக்குகிறார்கள், தனிமையில் வாழ்கிறார்கள், தங்கியிருக்கும் இடம் அவ்வளவு சிறப்பாக இருக்காது, உணவைப் பெறுவதில் சிரமம், பணக் கஷ்டம். இப்படி அவர்களை என்னதான் நல்லமுறையில் கவனித்தாலும் அடுத்த முறை அவர்களைக் காணும்போது நமக்கே திருப்தியாக இருக்காது. அவர்
களின் நிலைமை ஓரளவு மோச
மடைந்திருக்கும்," என்றார்.
சமூக சேவைகளின் ஒருங்
கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான டெஸ்மண்ட் லீயும் மாநாட்டில் பேசினார்.
தங்களது சுகாதாரத்தைக் கட்டிக்காப்போருக்கு எளிய தீர்வுகளை வழங்குவதில் சமூகப் பரிந்துரைத் திட்டம் முக்கிய பங்கு வகிப்
பதாக அவர் குறிப்பிட்டார்.
குழு உடற்பயிற்சித் திட்டம், சமூகத் தோட்டமிடல், புகைப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான திட்டம் போன்ற மருத்துவம் சாராத நிகழ்வுகளில் குடியிருப்பாளர்களை ஒன்றுசேர்த்து அவர்களின் சுகாதாரப் பராமரிப்புக்கு இந்த சமூகப் பரிந்துரைத் திட்டம் உதவும் என்றார் திரு லீ.
"குடியிருப்பாளர்கள் சுகாதாரமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ள இது உதவுகிறது. அத்துடன் சமூகத்திலிருந்து கிடைக்கும் வலுவான ஆதரவின் மூலமும் அவர்கள் பயனடைகிறார்கள். உடல்
நிலையை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளை முன்னரே அடையாளம் கண்டு அவற்றின் மீது கவனம் செலுத்தவும் இது கைகொடுக்கும்," என்றும் திரு லீ கூறினார்.

