பூன் லே வட்டாரத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரு ஆடவர்களுக்கு சிறைத் தண்டனையும் தலா ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
21 வயதான முகம்மது சஜித் சலீமுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. குண்டர் கும்பலில் உறுப்பினராக இருந்தது, ஆயுதங்கள் கொண்டு ஒருவரைக் காயப்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு துணைபோன 20 வயது நபருக்கு மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டது. அதோடு அவருக்கு $1,800 அபராதமும் விதிக்கப்பட்டது. குண்டர் கும்பலில் உறுப்பினராக இருந்தது, ஆயுதங்கள் கொண்டு ஒருவரைக் காயப்படுத்தியது, ஒருவரைக் காயப்படுத்தப்போவதாக மிரட்டியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சிறுவர் சட்டத்தின் கீழ் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதால் அவருடைய அடையாளத்தை வெளியிட முடியாது.
இவ்வாண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று புளோக் 175 பூன் லே டிரைவில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் பிரவீன் ராஜ் சந்திரன் என்பவரை ரொட்டி வெட்டும் கத்திகளைக் கொண்டு தாக்கி கடுமையான காயம் விளைவித்ததாக இவ்விரு ஆடவர்கள்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
தாக்குதலில் பிரவீனுக்கு தலையிலும் கை, கால்களிலும் 12 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குப் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தாக்குதலுக்கு ஆளான மற்றொருவரான சரண் குமாருக்கு தலையில் 8 சென்டிமீட்டர் அளவு ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது.


