சிங்கப்பூரில் கடந்த மூன்றாண்டுகளில் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் பிடிஓ வீடு வாங்க முதல்முறை விண்ணப்பித்தவர்களில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்களின் விகிதம் 20% முதல் 24% வரை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் தாக்கலான கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
அத்தகைய வீட்டை வாங்க ஐந்து முறைக்கும் மேல் முயன்றவர்கள் 2% கூட கிடையாது என்றாரவர். முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் பிடிஓ வீடுகளுக்கு இப்போது தேவை மிக அதிகமாக இருக்கிறது என்பதை அவர் சுட்டினார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ஹி டிங் ருவுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அத்தகைய பேட்டைகளில் வீட்டை வாங்க விண்ணப்பிக்கும் அனைவருக்குமே வீடு கிடைத்து விடாது. ஆகையால், முதிர்ச்சியடையாத பேட்டைகளில் கட்டப்படும் பிடிஓ வீடுகளை வாங்க விண்ணப்பிக்கும்படி விண்ணப்பதாரர்களுக்கு ஊக்கமூட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டுவரைப்பட்ட காலத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் 95 விழுக்காட்டு வீடுகள் சிங்கப்பூரர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன.
அந்த வீடுகளின் உரிமையாளர்கள் இருவருமே குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் 780,000 முதல் 970,000 வரைப்பட்ட வீவக வீடுகளைச் சொந்தமாகக் கொண்டிருந்தனர்.
சிங்கப்பூர் நிரந்தரவாசிகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சொந்தமான அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை 2010ல் சுமார் 47,000 (6%) ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021ல் 44,000 (4%) ஆகக் குறைந்து இருக்கிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லீ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்து மூலமான வேறோர் உறுப்பினரின் கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சிங்கப்பூரர்களின் வீட்டு தேவையை நிறைவேற்றுவதே அரசாங்க வீட்டுத் திட்டத்தின் இலக்கு. சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒருவரையாவது உறுப்பினராகக்ெகாண்ட குடும்பங்கள் மட்டுமே மானிய விலையிலான பிடிஓ அடுக்கு மாடி வீட்டை வாங்க முடியும்.
மனுச் செய்வோரில் முக்கியமான விண்ணப்பதாரர், குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
நிரந்தரவாசிகளைக் கொண்ட குடும்பங்கள், மறுவிற்பனை வீட்டை மட்டுமே வாங்கலாம். இவர்களுக்கு வீட்டு மானியம் கிடையாது. நிரந்தரவாச உரிமையைப் பெற்று குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் வீடு வாங்க முடியும்.
சிங்கப்பூர்வாசிகள் அல்லாத மற்றவர்கள் வீவக வீட்டைச் சொந்தமாக வாங்க முடியாது.
சிங்கப்பூர் நிரந்தரவாச உரிமை யைக் கைவிடுவோர், வீட்டையும் கைவிட்டுவிட வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால் வீவக வீட்டை கட்டாயமாக அவர்களிடம் இருந்து பெற்றுவிடும் என்றும் அமைச்சர் விளக்கினார். இத்தகையோரின் எண்ணிக்கை மிக மிக சொற்பம் என்றார் அவர்.
அண்மைய வீவக வீடு விற்பனைகளின்போது வீடுகளைப் பெற்ற மனுதாரர்களில் 10 பேரில் சுமார் நான்கு பேர், வீட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
விரும்பிய வீடு கிடைக்கவில்லை என்பதையும் பிறகு வீட்டை வாங்கிக்கொள்ளலாம் என்று அல்லது மறுவிற்பனை வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று தாங்கள் முடிவெடுத்துவிட்டதையும் இதற்கான காரணங்களாக அவர்கள் தெரிவித்தனர்.

