அரசாங்க நிலத்தில் அத்துமீறி நுழைவோர் அல்லது அனுமதி இல்லாமல் செயல்படுவோர் விரைவில் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்குவார்கள்.
அத்தகைய நபர்கள் ஏற்படுத்திய சேதத்தை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கத்திற்கு இழப்பீடு கொடுக்கும்படி நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிடக்கூடும்.
நாடாளுமன்றம் அரசு நில பாதுகாப்பு மசோதாவை நேற்று நிறைவேற்றியது. இதனையடுத்து அரசாங்க நிலத்தில் அனுமதி இல்லாமல் இடம்பெறக்கூடிய செயல்களுக்கான கூடினபட்ச அபராதம் $5,000லிருந்து $50,000 ஆக அதிகரிக்கிறது.
இப்போது ஆறு மாதமாக இருக்கும் சிறைத்தண்டனை தொடர்ந்து நடப்பில் இருந்து வரும்.
கடுமையான தண்டனைகள் ஒருபுறம் இருக்க, சிங்கப்பூர் நில ஆணைய அதிகாரிகளுக்கு விரைவில் பரந்த அளவிலான அமலாக்க அதிகாரங்களும் இருக்கும். சிறுசிறு குற்றங்களுக்கு அவர்கள் அபராதங்களை விதிப்பார்கள்.
அனுமதியில்லாமல் செயல்கள் இடம்பெறுவதாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், நீதிமன்ற ஆணை எதுவும் இல்லாமல் எந்தவோர் இடத்திலும் சோதனையிடும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவின் கீழ் அரசு நில பாதுகாப்புச் சட்டம், இப்போதைய அரசு நில ஆக்கிரமிப்புச் சட்டத்திற்கு மாற்றான ஒன்றாக இடம்பெறும்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மக்ஸாம், புதிய சட்டங்கள் ஆக நவீன, பரந்த அளவிலான அமலாக்க ஏற்பாடாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அது, அரசாங்க நிலத்தைப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் நில ஆணையத்திற்கு ஆதரவு அளிப்பதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க நிலத்தைத் தாங்கள் ஆக்கிரமித்து இருப்பதாக பொதுமக்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்று பல உறுப்பினர்களும் விளக்கம் கேட்டனர்.
புதிய சட்டத்தின்கீழ், அரசு நிலத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டதாக யார் மீதாவது குற்றம் சுமத்தப்பட்டால், அவர் தான் அந்தக் காரியத்தை தெரியாமல் செய்துவிட்டதை மெய்ப்பிக்க வேண்டும்.
தாங்கள் செயல்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பது தங்களுக்குத் தெரியாமல் போனதற்கான காரணங்களையும் அவர்கள் முன்வைக்க வேண்டும்.
புதிய சட்டங்களின்படி கூடின பட்ச அபராதங்கள் விதிக்க முடியும் என்றாலும் அத்துமீறி நுழைவோர் அனைவர் மீதுமே நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறமுடியாது என்று அவர் விளக்கினார்.
குற்றத் தீர்ப்பின் பேரில் நீதிமன்றம் விதிக்கக்கூடிய தண்டனை வழக்கின் நிலவரங்களையும் சூழ்நிலையையும் பொறுத்ததாக இருக்கும் என்றார் அவர்.

