நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர்கள், மாணவர் பரிவர்த்தனை செயல்திட்டங்களின் கீழ் அதிக வாய்ப்புகளைப் பெற்று பிரிட்டனின் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் கூட்டு ஆய்வுப் படிப்புகளை விரைவில் மேற்கொள்ளலாம்.
இந்த இரண்டு கல்வி நிலையங்களும் நேற்று அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்தன. இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து ஆய்வு மையம் ஒன்றை உருவாக்கும். 'என்டியு-இம்பீரியல் சுகாதார, நீடித்த நிலைத்தன்மை, தொழில்நுட்ப மையம்' என்று அந்த ஆய்வு மையத்திற்குப் பெயர் சூட்டப்படும்.
இந்த இரண்டு உயர்கல்வி நிலையங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான உடன்பாட்டின் ஓர் அங்கமாக இவை இடம்பெறுகின்றன.
அந்த உடன்பாடு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று கையெழுத்தானது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவரான பேராசிரியர் சுப்ரா சுரேசும் இம்பீரியல் கல்லூரி தலைவரான பேராசிரியர் ஹுக் பிராடியும் அதில் கையெழுத்திட்டனர்.
பேராசிரியர் ஹுக், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு முதன்முதலாக இப்போது வருகையளித்து இருக்கிறார்.
இந்த இருவரும் சேர்ந்து செயல்பட்டு என்டியுவில் லீ கோங் சியான் மருத்துவப் பள்ளியைத் தோற்றுவித்தனர். அந்தப் பள்ளி 2017 ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

