தாதியர்கள் பெறக்கூடிய செயல்திறன் தரத்தைத் தீர்மானிப்பதில் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மக்ஸாம் தெரிவித்தார்.
இருந்தாலும்கூட தாதியர்கள் சில துறைகளில் மேம்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பது தெரியவரும் பட்சத்தில், அவர்களின் செயல்திறனிலும் மதிப்பீட்டிலும் எதிர்மறையான கருத்துகள் தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.
நீ சூன் தொகுதி உறுப்பினர் லூயிஸ் இங்கிற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசிய திருவாட்டி ரஹாயு, தாதியர்கள் முழுமையாக மதிப்பிடப்படுவது பற்றி விளக்கினார்.
நோயாளிகளுக்குக் குறித்த நேரத்தில் தரமிக்க பராமரிப்புச் சேவையை வழங்குவது, தலை மைத்துவ ஆற்றலை வெளிப்படுத்துவது, நிபுணத்துவ ஆற்றல், சொந்த மேம்பாடு போன்ற துறைகளின் வழியாக அவர்கள் மதிப்பிடப்படுவதாக திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.
நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கக்கூடிய கருத்துகளை, நிர்வாகம் மிக முக்கியமானவையாகக் கருதுகிறது. என்றாலும் அதை வைத்து நேரடியாக தாதியரின் செயல்திறன் தீர்மானிக்கப்படுவதில்லை என்று அவர் விளக்கினார்.
நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கக்கூடிய கருத்துகள் நம்முடைய பொதுச் சுகாதார பராமரிப்பு நிலையங்களின் தர பராமரிப்பு மேம்பாட்டின் முக்கியமான ஓர் அங்கமாக கருதப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

