இணையப் பாதுகாப்பு குறித்து பணிக்குழு பரிந்துரை
சிங்கப்பூரில் கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இணைய ஊடுருவல் மற்றும் கணினிக் கட்டமைப்பைக் கைவசப்படுத்திப் பணம் பறிக்கும் ஆபத்தான மென்பொருள் ஊடுருவல் சம்பவங்கள் 54 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தி தனியார் நிறுவனங்களையும் அரசாங்க அமைப்புகளையும் இணைய ஊடுருவலில் பாதுகாக்கும் வகையில் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பணிக்குழு ஒன்று தொடங்கப்பட்டது. அந்தப் பணிக்குழு நேற்று தனது முதல் கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இணையம் மற்றும் கணினிக் கட்டமைப்பு ஊடுருவல் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, அவற்றில் இருந்து நாம் எவ்வாறு நமது கணினிக் கட்டமைப்பைப் பாதுகாத்துக்கொள்வது போன்றவற்றை விளக்கியுள்ளது.
நிறுவனங்களின் முக்கிய தரவுகளைக் கைவசப்படுத்தி, அந்நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறிப்பது, நிறுவனங்களின் முக்கியத் தரவுகளைக் கைவசப்படுத்தி பணம் கொடுக்கும் கட்டாயத்திற்குக் கொண்டு செல்வது போன்ற ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு மீட்சிபெறுவதற்கான பரிந்துரைகளையும் அந்தப் பணிக்குழு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்துலகச் சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் உலகளாவிய அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு அந்தப் பணிக்குழு தனது முதல் கட்ட அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் நிறுவனங்கள் தங்கள் கட்டமைப்புத் தரவுகளை ஒரே இடத்தில் வைக்காமல் தனித்தனியாகப் பிரித்துக் கையாளவும் பரிந்துரைத்துள்ளது.
கணினி ஊடுருவலின்போது திருடப்பட்ட தரவுகளை வெளியிடாமல் இருக்க பிணைப் பணம் கொடுத்தாலும் அவர்கள், தாங்கள் கைவசப்படுத்திய தரவுகளை வெளியிடமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. அவ்வாறு பணம் கொடுத்து அவர்களிடம் நமது தரவுகளை மீட்பது என்பது இதுபோன்ற ஊடுருவிகளை ஊக்குவிக்கும் செயலாக அமையலாம் என்று பணிக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.
இக்குழு சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு முகவை, அரசு தொழில்நுட்ப முகவை, தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம், தகவல் தொடர்பு அமைச்சு, தற்காப்புப் படை, உள்துறை அமைச்சர், சிங்கப்பூர் நாணய வாரியம், சிங்கப்பூர் காவல்துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கியது.

