இக்கட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு உதவும் ஒரு அறநிறுவனத்தின் தலைவராக இருந்த டியோ, தன்னிடம் பாடம் பயின்ற எட்டு வயதுச் சிறுமியைத் தாக்கிய குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
லுதரன் சமூக பராமரிப்புச் சேவை (எல்சிசிஎஸ்) என்னும் அறநிறுவனத்தின் தலைவராகப் பணிபுரிந்த அவருக்கு கடந்த நவம்பர் மாதம் நான்கு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
சமூக சேவை வழங்கும் அறநிறுவனமான எல்சிசிஎஸ், இக்கட்டுகளில் சிக்கித் தவிக்கும் சிறார்களுக்கும் இளையர்களுக்கும் உதவி அவர்களுக்கு, குடும்பத்துடன் நல்லுறவை ஏற்படுத்தித் தரும் சேவையை செய்து வருகிறது.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜஸ்டின் முய், "வன்முறையை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். தி டியோ, தான் செய்த செயல்களுக்கான தண்டனையை அனுபவித்தார். அத்துடன் தானாக முன்வந்து இந்த நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
"இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் தடுப்பதில் ஒரு சமூக சேவை வழங்கும் அறநிறுவனமாக நாங்கள் உறுதியாக உள்ளோம். அவ்வகையில் திரு டியோவின் பதவிவிலகல் முடிவை வரவேற்கிறோம்," என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், "டியோ குறித்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தேவையேற்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அறநிலையத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அறநிறுவன அமைப்புச் சட்டம் 1994ன்படி தொண்டூழியச் சேவை வழங்கும் அமைப்புகளில் தலைமைப் பதவி வகிப்போர், நேர்மையற்ற செயல்கள், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால் அவர்கள் அறநிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்க தகுதியற்றவர் என்று அந்த ஆணையம் தெரிவித்தது.
"சமூகத் தரங்களில் இருந்தும் நன்னடத்தையில் இருந்தும் விலகிச்செல்லும் ஒருவரை இதுபோன்ற அறநிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருந்து அறநிலைய ஆணையத்தின் உத்தரவின் வழி நீக்க முடியும். வழக்குகளைப் பொறுத்து இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும்," என்று ஆணையம் தெரிவித்தது.
திரு டியோ, பகுதிநேரமாக துணைப்பாட வகுப்பு நடத்தி வந்தார். இவரது விவரம் குறித்து இணையத் தளம் ஒன்றில் அறிந்த சிறுமியின் தந்தை, கடந்த ஜனவரி மாதம் தனது மகளை கணிதம் பயில்வதற்காக இவரிடம் சேர்த்தார். சிறுமியின் இல்லத்தில் வந்து கற்றுக்கொடுத்த திரு டியோ, பாடம் குறித்து தான் கேட்ட கேள்விக்கு சிறுமி தவறான விடை கூறியதால் கோபமடைந்து, சிறுமியைத் திட்டிக்கொண்டே தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

