ஜூரோங் லேக் வட்டாரத்தில் அமையவுள்ள புதிய அறிவியல் நிலைய வளாகம், எதிர்பார்க்கப்பட்டதைவிட இரண்டு ஆண்டுகள் தாமதமாக, வரும் 2027ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்ட தடைகளும் தாமதமும் அதற்குக் காரணங்களாளும்.
கட்டடம் அளவுக்கு அதிக செலவில்லாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறியியல் ஆய்வுகளை நடத்த கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அறிவியல் நிலையமும் கல்வி அமைச்சும் நேற்று கூறின.
புதிய கட்டடம் நிறைவுபெறும் வரை, ஜூரோங் ஈஸ்டில் அமைந்துள்ள தற்போதைய கட்டடம் தொடர்ந்து பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் என்று அறிவியல் நிலையத்தின் தலைமை நிர்வாகி லிம் டிட் மெங் கூறினார்.
கட்டுமானச் செலவுகளில் கவனம் செலுத்த அறிவியல் நிலையம் உறுதிகொண்டிருப்பதாகவும் அது நீடித்த நிலைத்தன்மைமிக்க கட்டடத்துக்கான நல்லுதாரணமாக விளங்க தாங்கள் திட்டமிடுவதாகவும் இணைப் பேராசிரியர் லிம் குறிப்பிட்டார்.
புதிய அறிவியல் நிலையக் கட்டடம் சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் ஜூரோங் லேக் வட்டாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் பகுதியாக நிலையம் அங்கு கட்டப்படும்.
புதிய நிலையத்தில் ஒன்றோடு ஒன்று பின்னியிருக்கும் ஐந்து நீள் சதுரக் கட்டடங்கள் இருக்கும்.
அதன் பெரிய கண்ணாடி சன்னல்களிலிருந்து வருகையாளர்கள் ஏரியைப் பார்க்க முடியும்.
அருகில் உள்ள பூங்கா, ஏரி ஆகியவற்றுக்கு மேலே மிதப்பது போன்று காட்சியளிக்கும் வகையில் வளாகம் வடிவமைக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.
உலகப் புகழ்பெற்ற ஸாஹா ஹடிட் கட்டட வடிவமைப்பு நிறுவனமும் ஆர்க்கிடெக்ட்ஸ் 61 எனும் உள்ளூர் நிறுவனமும் இணைந்து கட்டடத்தை வடிவமைத்துள்ளன.
புதிய நிலையத்தில் கோளரங்கமும் திறந்த வெளிகளும் அமைக்கப்படவுள்ளன.
பொதுமக்கள் இயற்கையை எளிதில் சென்றடையவும் அங்கு வசதி கள் இருக்கும்.
அறிவியல் நிலையத்தில் நேற்று 'அன்டேம் ஆஃப்டர் டார்க்' நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அறிவில் கல்விக்கு மதிப்புக்கூட்ட புதிய கட்டடம் முயலும் என்றும் சமூக நிகழ்ச்சிகளை அது ஏற்று நடத்தும் என்றும் கூறினார்.

