சிங்கப்பூரின் பழம்பெரும் ஹோக்கியன் ஆலயங்களில் ஒன்றும் வரலாற்றுச் சின்னமுமான தியன் ஹாக் கெங் சீனக் கோவிலை மெய்நிகர் வழியாக வலம்வர உதவும் புதிய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் அதிகமான மக்கள், குறிப்பாக இளையர்களுக்கு தங்கள் பாரம்பரியத்தைப் பற்றி தெரியவைக்க இது ஒரு சிறந்த வழி என்று நேற்று சிங்கப்பூர் ஹோக்கியன் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். நேற்று புதிய செயலியையும் அவர் வெளியிட்டார்.
உள்ளூர் சீனர்கள், சிங்கப்பூரின் பல்லின, பன்முக கலாசார சமூகத்தில் தனித்துவமான கலாசாரத்தையும் அடையாளத்தையும் உருவாக்கியுள்ளனர் என்று துணைப்பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
இதை அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆலயத்தின் வரலாறு, கட்டட வடிவமைப்பு ஆகியவை பற்றி இளையர்கள் தெரிந்துகொள்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ஆலய நிர்வாகத்தினரை திரு வோங் பாராட்டினார்.
தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் உள்ள தியன் ஹாக் கெங் சீன ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமை யானது. மாஸு எனும் கடல் தேவதை அங்கு வழிபடப்படுகிறது.

