குடும்பங்களுக்காகவும் வளர்ப்புப் பிராணிகளுக்காகவும் ஜூரோங் கில் புதிதாக விளையாட்டுத்திடல் ஒன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டு உள்ளது.
'ஜூரோங் விளையாட்டுத்திடல்' என்று குறிப்பிடப்படும் அத்திடல் 355,000 சதுர அடி பரப்புள்ளது. அதில் ஆசியாவின் ஆகப்பெரிய நாய் நீர்ப்பூங்கா அமைந்துள்ளது. வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்க வசதிகளும் இருக்கின்றன. பொதுமக்கள் காய்கறி, பழங்களைப் பயிர் செய்ய சமூகத் தோட்டம் ஒன்றும் உள்ளது.
ஜூரோங் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து 15 நிமிடங்கள் நடந்தே அந்தத் திடலுக்குப் போய்விடலாம்.
ஹுவா ஹிங் டிரேடிங் கம்பெனி என்ற தோட்டத்துறை மொத்த விற்பனை நிறுவனம் அந்தத் திடலை நிர்வகிக்கிறது. திடல் $5 மில்லியனுக்கும் அதிக செலவில் உருவாகி உள்ளது.
உடலுறுதி ஆர்வலர்களுக்கும் அங்கு விளையாட்டு வசதிகள் உண்டு. அங்குள்ள 56 தோட்ட இடங்களைப் பொதுமக்கள் குத்தகைக்கு எடுத்து காய்கறி, பழங்களைப் பயிர்செய்து அவற்றை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார முடிவில் நடக்கும் சந்தையில் விற்கலாம்.
அந்தத் தோட்ட இடங்கள் 320 சதுர அடி முதல் 640 சதுர அடிவரை பரப்பளவு உள்ளவை. அவற்றுக்கு மாதச் செலவு $500 முதல் $900 வரை ஆகும். ஹுவா ஹிங் டிரேடிங் கம்பெனி, நேற்று இரு தோட்ட இடங்களை புக்கிட் பாத்தோக் சமூக மன்றத்திற்கு கொடையாக அளித்தது.
சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மக்ஸாம், நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது போன்ற திடல்கள், பொதுமக்கள், குடும்பங்கள் ஒன்றாகச் சேரவும் வாழ்வில் நீங்காத நினைவலைகளை உருவாக்கவும் உதவு வதாக அவர் தெரிவித்தார்.