புக்கிட் தீமா விரைவுச்சாலையில் சனிக்கிழமையன்று கார் ஒன்றுடன் விபத்தில் சிக்கிய 70 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் மாண்டார்.
உட்லண்ட்சை நோக்கி செல்லும் வழியில் சனிக்கிழமை மதியம் விபத்து நடந்தது. விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிய 35 வயது மாதும் அவருடன் காரில் இருந்த ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலே மாண்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய குற்றத்திற்காக கார் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றி மாலை 2.55 மணிக்குச் செய்தி கிடைத்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். விசாரணை தொடர்கிறது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட இரண்டாவது விபத்து இது. மற்றொரு சம்பவத்தில் புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் காருக்கும் மோட்டார்சைக்கிளுக்கும் இடையே விபத்து ஏற்பட்டது. மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.