சிங்கப்பூர், வட்டார நாடுகளில் வானிலை முன்னுரைப்பையும் பருவநிலையைக் கணிக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் புதிய ஆராய்ச்சித் திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது. சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய, இந்தோ-பசிபிக் வட்டாரங்களிலும் வானிலை, பருவநிலை ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிக்கும் பல ஆண்டு திட்டமாக இது விளங்கும்.
சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற அமைப்புக்கும் ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வுத் துறைக்கும் இடையிலான உத்திபூர்வ உறவைக் குறிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இது.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கான வானிலையை முன்னுரைப்பது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
உயர்தர வானிலை 'ரேடார்' தரவுகள், பருவகால முன்னுரைப்பு, வட்டார நாடுகளின் பருவநிலைக் கணிப்புத் தரவுகளின் ஆய்வு ஆகியவை இதற்காக பயன்படுத்தப்படும் என்று இரு அமைப்புகளும் குறிப்பிட்டன. இத்தகைய ஆய்வுத் திட்டங்களால் சிங்கப்பூரில் கனமழை பொழிவதை முன்னுரைப்பதில் மேம்பாடு காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் வழியாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையமும் ஆஸ்திரேலிய ஆய்வுத் துறையும் மேம்படுத்தப்பட்ட முன்னுரைப்பு, எச்சரிக்கை சேவைகளை வழங்க இயலும். அத்துடன் பருவநிலை மாற்றத்திற்குப் பொருந்தும் திட்டங்களுக்கும் கைகொடுக்கும்.
தேசிய சுற்றுப்புற வாரியம், அதன் சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு நிலையம் மேற்கொண்டுள்ள ஆய்வைப் பற்றி கடந்த ஜூலையில் குறிப்பிட்டிருந்தது.
நாட்டின் மூன்றாவது தேசிய பருவநிலை மாற்ற ஆய்வின் மூலம் 2100ஆம் ஆண்டு வரையிலான பருவநிலை முன்னுரைப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த 'வி3' ஆய்வின் வழி, பருவநிலை மாற்றத்தின் ஆபத்தான விளைவுகளுக்கு எதிரான வழிகளை நாடுகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட இயலும். ஆய்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

