மோனலிசா
மறைந்த எழுத்தாளர்களின் படைப்புகளை நினைவுகூரவும் தமிழ் இலக்கியத்தில் அவர்களின் பங்களிப்பைச் சிறப்பிக்கவும் தேசிய நூலக வாரியம் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்தந்த ஆண்டில் மறைந்த எழுத்தாளர்களைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் 'நினைவின் தடங்கள்' எனும் நிகழ்வு, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.
மறைந்த எழுத்தாளர்களின் வாழ்க்கைக்குறிப்பு, தமிழ் மொழிக்காக அவர்கள் ஆற்றிய நற்பணி, வெளியீடு கண்ட படைப்புகள் உள்ளிட்டவை இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இவ்வாண்டின் நிகழ்ச்சி கடந்த மாதம் 26ஆம் தேதியன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை 'ஸூம்' வழியாக நடைபெற்றது. இவ்வாண்டு மறைந்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், ஏ.பி. ராமன், தெணியான் (கந்தையா நடேசன்), கு.சின்னப்ப பாரதி, பாவலர் இறையரசன், கே.எஸ். சிவகுமாரன், தெளிவத்தை ஜோசப், பா.செயப்பிரகாசம் என்ற சூரியதீபன் ஆகிய எட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
இவர்களில் நாவல், சிறுகதை, சமூகவியல், அரசு அறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளில் அதிகளவு நூல்களை எழுதி வெளியிட்டவர்தான் எழுத்தாளர் செ.கணேசலிங்கன்.
பழம்பெரும் செய்தியாளரும் இலக்கிய ஆர்வலருமான ஏ.பி.ராமன் புனைந்த 700க்கும் மேற் பட்ட நாடகங்களில் பல, சிங்கப்பூர் மற்றும் தமிழக வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இடம்பெற்றுள்ளன.
இலக்கிய ஊடகத் துறைகளில் 'தெணியான்' என்றழைக்கப்பட்ட கந்தையா நடேசன், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், விமர்சனக்கட்டுரைத் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மூத்த புதின எழுத்தாளரும் அரசியல்வாதியுமான கு. சின்னப்ப பாரதி எழுதிய புதினங்களும் சிறுகதைகளும் ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம் உள்பட வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் போன்ற பன்முகத் திறமைக் கொண்ட பாவலர் இறையரசன், பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். மும்மொழியில் புலமை பெற்றவரும் பத்திரிகையாளருமான எழுத்தாளர் கே.எஸ். சிவகுமாரன் பல புத்தகங்களைப் பன்மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார்.
மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு நாவலாசிரியர், ஓர் இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.
அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்து தமக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டவர் அவர்.
விரிவுரையாளர் உள்பட பல்வேறு தமிழக அரசாங்கப் பொறுப்புகளை வகித்துள்ள எழுத்தாளர் சூரியதீபன், தம்முடைய படைப்புகளில் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதில் கைத்தேர்ந்தவர். அவர் பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர், ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினர். எழுத்தாளர்களுடைய சாதனைகள், வாழ்க்கை வரலாறு, பெற்ற விருதுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் இவ்வுரைகளில் இடம்பெற்றன. இந்நிகழ்வினை திருவாட்டி இலக்கியா செல்வராஜி வழிநடத்தினார்.

