ஜூரோங்-கிளமெண்டி, பாசிர் ரிஸ்-பொங்கோல் என்னும் இரு நகர மன்றங்களும் நகரமன்ற விதிகளுக்குட்பட்டு நடக்கத் தவறியது கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியுள்ளது.
கவனக்குறைவால் முதல்முறையாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அது நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தண்ணீர்த் தொட்டி மற்றும் மின்தூக்கி மாற்றத்திற்கான நிதி அடங்கிய வங்கிக் கணக்கிலிருந்து குறைவான தொகையை ஜூரோங்-கிளமெண்டி நகரமன்றம் மாற்றியதாகவும் கணக்கிடுதல் தவறு காரணமாக இது நிகழ்ந்ததாகவும் அமைச்சு தெரிவித்தது.
அடுத்த காலாண்டுகளுக்கான நிதி மாற்றத்தின்போது இந்தக் குறை சரிசெய்யப்பட்டது.
அதேபோல, 2021 செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பாசிர் ரிஸ்-பொங்கோல் நகரமன்றம் மின்தூக்கி மாற்ற நிதியின் ஒரு பகுதியை வர்த்தகச் சொத்துகளுக்குப் பதில் குடியிருப்புச் சொத்துகளுக்குத் தவறாக ஒதுக்கியதும் கண்டறியப்பட்டது.
இவ்வாண்டு அக்டோபரில் இந்தக் குறைபாடு சரிசெய்யப்பட்டது. இவ்விரு சம்பவங்களும் 'கடுமை குறைந்தவை'களாகக் கருதப்பட்டதாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பெருநிறுவன நிர்வாகத் திறனுக்காக இந்த இரண்டு நகரமன்றங்களுக்கும் பச்சை நிற மதிப்பீடு வழங்கப்பட்டது.
நிதி ஆண்டு 2021க்கான பச்சை நிற மதிப்பீடு இதர நகரமன்றங்
களுக்கும் வழங்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
17 நகரமன்றங்களின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை அந்தந்த நகரமன்றங்கள் தங்களது இணையப் பக்கத்தில் வெளியிடும்.
இந்த நிதி அறிக்கைகள் மீதும் கண்காய்வாளர்களின் இறுதி அறிக்கை மீதும் மறுஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சு தெரிவித்தது. விதிகளுக்கிணங்க நடந்துகொண்டதாக நகரமன்றங் கள் அளித்த உறுதிமொழியை சோதித்ததாகவும் அது குறிப்பிட்டது.

