'அக்ரிடிரேட் இன்டர்நேஷனல்' எனும் சரக்கு வணிக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி உலகளவில் 16 நிதி நிறுவனங்களை ஏமாற்றியதில் 469 மில்லியன் அமெரிக்க டாலர் (S$631 மி.) இழப்பு ஏற்பட்டது.
இந்தியா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளிலுள்ள முன்னணி வங்கிகளும் அந்த நிதி நிறுவனங்களில் அடங்கும். கடந்த 2016 ஜனவரி முதல் 2019 நவம்பர் மாதத்திற்கு இடையே இந்த நிதி இழப்பு ஏற்பட்டது.
ஏமாற்று, பொய்க் கணக்கு உட்பட தன்மீதான 12 குற்றச்சாட்டுகளை சிங்கப்பூரரான லுலு லிம் பெங் கிம், 63, நேற்று ஒப்புக்கொண்டார். அதுபோன்ற மேலும் 24 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
லிம்முக்கு 19½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென அரசாங்கத் துணை வழக்கறிஞர் நிக்கலஸ் கூ கேட்டுக்கொண்டார்.
"லிம்மின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பு எதிர்பாராதது, திகைப்பூட்டுவதாக உள்ளது. அதன் விளைவாக, சிங்கப்பூரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது," என்று திரு கூ குறிப்பிட்டார்.
அக்ரிடிரேட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றியபோது, தணிக்கை செய்யப்படாத, பொய்யான நிதி அறிக்கைகளை நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கும்படி கிம், தமது கீழ்நிலைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அக்ரிடிரெட் நிறுவனத்திற்கான கடன் தொகையை மேலும் எந்த அளவிற்கு நீட்டிக்கலாம் என்பதை மதிப்பிட அந்த ஆவணங்கள், அந்த நிதி நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டன.
அந்த ஆவணங்களின் அடிப்படையில், அந்த 16 நிதி நிறுவனங்களும் மொத்தம் 886 மில்லியன் அமெரிக்க டாலரை அக்ரிடிரேட் நிறுவனத்திற்குப் பொருள்களை விநியோகித்த நிறுவனங்களுக்கும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கும் வழங்கின.
செம்பனை எண்ணெய், நிலக்கரி வெட்டியெடுத்தல் ஆகிய தொழில்களில் அக்ரிடிரேட் நிறுவனம் ஈடுபட்டுவந்த நிலையில், எண்ணெய், நிலக்கரி விலையேற்றம் காரணமாக 2020 ஜனவரியில் நிதிச் சிக்கலை எதிர்கொண்டது.
அத்துடன், அந்நிறுவனத்தைத் தோற்றுவித்த இங் சே பெக் மீதும் அவரின் மகனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இங் ஸின்வை மீதும் மோசடிப் புகார்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், கடந்த 2020 ஜனவரி 15ஆம் தேதி வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு, அக்ரிடிரேட் நிறுவனத்திற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. அதற்கு மறுநாளே லிம் பிரிட்டனுக்குச் சென்றுவிட்டார். ஓராண்டுகாலமாக சிங்கப்பூர் காவல்துறை லிம்மைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் அவர் பதிலளிக்கவில்லை.
பின்னர் அவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருப்பதாகத் தகவல் கிட்டியதை அடுத்து, 2021 ஜனவரியில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
லிம்முக்கான தண்டனை குறித்து முடிவுசெய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறிய நீதிபதி கோ கெங் சியோங், இந்த வழக்கை ஒத்திவைத்தார்.