சிங்கப்பூரின் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருள் பரிவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. அதிகமான குடும்பங்களுக்கு பொட்டலங்கள் கூடுதலான முறை வழங்கப்படும்.
'வீகேர்@நார்த் வெஸ்ட் சர்விஸ் வீக்ஸ்+' எனும் அந்த விரிவாக்கப்பட்ட திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அதில் 50 வெள்ளி மதிப்பிலான பரிவுப் பொட்டலங்களை 7,300க்கும் அதிகமான குடும்பங்கள் பெறும்.
தற்போது ஓராண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் அந்தப் பொட்டலங்கள் இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும்.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் கடந்த 2014ஆம் ஆண்டில் அந்த விநியோகத் திட்டத்தைத் தொடங்கியது. முன்னதாக அரசாங்க வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் மட்டும் பரிவுப் பொட்டலங்களைப் பெற்று வந்தனர்.
விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்கீழ், அந்த வட்டாரத்தில் உள்ள சமூக உதவித் திட்டங்களில் உதவி பெறும் குடியிருப்பாளர்களும் அரசாங்க வாடகை வீடுகளில் வசிக்காதவர்களும் உணவுப் பொருள் பரிவுப் பொட்டலங்களைப் பெறுவர்.
உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் நோக்கில் விநியோகத் திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் தொடக்கவிழா சுவா சூ காங்கில் உள்ள லிம்பாங் பூங்காவில் நேற்று நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், குறைந்த வருவாய் குடும்பங்களுக்கும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும் அரசாங்கம் தற்போது வழங்கும் உதவித் திட்டங்களுடன் புதிய திட்டமு நிறைவு தரும் என்று கூறினார்.
"வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க, இன்னும் பல வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு ஆண்டு முழுவதும் உணவு உதவி கிடைக்கும் என்பது மகிழ்ச்சி தருகிறது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்க இது உதவும்," என்றார் திரு வோங்.
மேலும், பரிவுப் பொட்டங்களில் உள்ள 34 பொருள்களில் 12ஐ குடியிருப்பாளர்கள் தாங்களே தேர்வு செய்துகொள்ளலாம். நேற்று தொடங்கி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி வரை, இணையத்தில் உள்ள படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த ஆறு வாரங்களில் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் திடீர் சந்தைகள் நடத்தப்பட்டு அவற்றில் குடியிருப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
முன்னதாக பரிவுப் பொட்டலங்களில் 21 பொருள்கள் மட்டுமே இருந்தன. குடியிருப்பாளர்களால் அப்பொருள்களைத் தேர்வு செய்ய முடியாது.

