கோல்டன் மைல் காம்பிளக்ஸ் வளாகத்தில் புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்படுவதாகக் கூறி போலி படங்களை வெளியிட்டு விளம்பரப் படுத்தும் நான்கு இணையத் தளங்களை சொத்து முகவை மன்றம் (சிஇஏ) விசாரித்து வருகிறது.
'கோல்டன் மைல் குடியிருப்புகள்'' என்று குறைந்தது நான்கு அங்கீகரிக்கப்படாத இணையத் தளங்கள் விளம்பரம் செய்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதில் ஓவியரின் பார்வையில் கோல்டன் மைல் காம்பளக்ஸ் குடியிருப்பு வீடுகள் என படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டடத்தின் தோற்றம், வடிவமைப்பு, வரைபடம் போன்ற விவரங்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. குடியிருப்பு, வர்த்தக இடங்கள் தவிர முழு வசதியுள்ள வீடுகளும் கட்டப்படுவதாக இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.
விருப்பமுள்ளவர்கள், இந்த இணையத் தளங்கள் வழியாக சிறப்பு விலைக்கும் மாதிரி வீடு களைக் காணவும் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவில் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
இதே போன்ற விளம்பரங்கள் சமூக ஊடகங்களிலும் வலம் வருகின்றன.
கடந்த மே மாதம் 49 ஆண்டு பழமையான கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கட்டடத்தை வாங்கிய கூட்டு மேம்பாட்டாளர்களிடம் இது பற்றி கேட்டபோது, இணையத்தளமோ அல்லது அதில் இடம்பெற்ற படங்களோ தங்களால் அங்கீகரிக்கப் படாதவை என்று கூறியது.
"கோல்டன் மைல் காம்பிளக்சை உருமாற்றும் பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். அலுவலகங்கள், குடியிருப்பு வீடுகள், சில் லறைக் கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உத்திகளையும் பரிசீலித்து வருகிறோம். மேம்பாடு பற்றி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
"ஓவியரின் கண்ணோட்டம் என்று எந்தப் படத்தையும் வெளியிடவில்லை," என்று 'சினோ லாண்ட்', 'ஃபார் ஈஸ்ட் ஆர்கனைசேஷன்' இடம்பெற்றுள்ள கூட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் பெரனியல் ஹோல்டிங்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் எந்தவொரு சொத்தை விற்கவும் அல்லது வாடகைக்கு விடவும் விளம்பர செய் வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று சொத்து முகவை மன்றம் வலியுறுத்தியது.
தவறான வழிகாட்டும் தகவல் களுடன் முறையற்ற வகையில் விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறிய மன்றம், மீறுவோர் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
இதற்கிடையே நான்கில் இரண்டு போலி இணையத் தளங்கள் நேற்று அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.