'விலையைப் பெரிதும் குறைத்தால் தீங்காகும்'

'விலையைப் பெரிதும் குறைத்தால் தீங்காகும்'

2 mins read
866d45f5-1e52-4276-9e1b-d533c364a131
-

பிடிஓ வீட்டு விலை குறித்து தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன்

நிலத்­தின் விலை­யைக் கருத்­தில் கொள்­ளா­மல், தேவைக்­கேற்ப கட்டி விற்­கப்­படும் 'பிடிஓ' வீடு­களின் விலை­யைப் பெரி­தும் குறைத்­தால் அது சிங்­கப்­பூ­ரர்­களுக்கு உத­வு­வ­தற்­குப் பதி­லா­கத் தீங்­காக முடி­யும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை­ய­மைச்­சர் சிம் ஆன் கூறி­யுள்­ளார்.

அர­சாங்க நிலம் நாட்­டின் கையி­ருப்­பின் ஒரு பகுதி என்­ப­தால் சந்தை விலைக்­கேற்ப அதற்­கான விலை­யைச் செலுத்­தா­மற்­போ­னால் அதன்­வா­யி­லாக கையி­ருப்­பின் மதிப்பு குறை­யும் என்­றார் அவர்.

இப்­போ­தைய தலை­மு­றை­யி­னர் மட்­டு­மன்றி வருங்­கா­லத் தலை­முறை­யி­ன­ருக்­கும் அது தீங்கு விளை­விக்­கும் என்று அவர் நேற்று முன்­தி­னம் பேஸ்­புக்­கில் கூறி­யி­ருந்­தார். சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைச் சேர்ந்த தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் எழுப்­பிய கேள்­விக்கு அவர் பதில் அளித்­தார்.

முன்­ன­தாக இம்­மா­தம் 8ஆம் தேதி, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளின் விலை­யைக் கட்­டுப்­படி­யா­ன­தாக வைத்­தி­ருக்­கப் போது­மான அள­விற்கு அர­சாங்­கத்­தின் மானி­யங்­கள் உள்­ள­னவா என்று திரு லியோங் ஃபேஸ்புக்­கில் கேட்­டி­ருந்­தார்.

அர­சாங்­கம் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ரி­டம் இருந்து முன்­னர் குறை­வான விலை­யில் நிலத்தை வாங்­கி­ய­தால் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி வீடு­க­ளின் விலையை நிர்­ண­யிக்­கும்­போது அதில் நிலத்­துக்­கான விலை­யைச் சேர்க்­கக்­கூ­டாது என்று அவர் கூறி­யி­ருந்­தார்.

'பிடிஓ' வீடு­க­ளின் விலை­யில் நிலத்­தின் விலை­யை­யும் சேர்த்­துக்­கொள்­வது அவ­சி­யம் என்று திரு­வாட்டி சிம் விளக்­கி­னார்.

வீடு­க­ளின் விலை­யைக் கட்­டுப்­ப­டி­யா­ன­தா­க­வும் நிலை­யா­க­வும் வைத்­தி­ருக்க அர­சாங்­கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வந்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லான வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் குடும்­பத்­தின் நான்கு அல்­லது ஐந்­தாண்­டுக்­கான மொத்த வரு­மா­னத்தை வீடு வாங்­கப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். உல­கின் மற்ற நக­ரங்­களில் உள்­ளோர் இதற்­கென எட்டு முதல் 20 ஆண்டு வரு­மா­னத்­தைச் செல­வி­டு­வதை அவர் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரர்­கள் பெரும்­பா­லும் மத்­திய சேம நிதி­யி­லி­ருந்து வீட்­டுக் கட­னுக்­கான பணத்­தைச் செலுத்­து­வதை அவர் சுட்­டி­னார்.

அர­சாங்­கம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அக்­க­றை­கள், தேவை­கள் ஆகி­யவை தொடர்­பில் இணக்­க­மான போக்­கைக் கடைப்­பி­டித்து வரு­வ­தா­கக் கூறிய திரு­வாட்டி சிம் ஆன், இத்­த­கைய நிதி­யு­த­வி­கள் தொட­ரும் என்று உறு­தி­ய­ளித்­தார்.