சிங்கப்பூரில் வாழ்வின் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளுக்கான சேவைகளுக்கு ஆதரவு வழங்கும் வண்ணம் கோ அறநிறுவனம் $6.35 மில்லியன் வழங்க உறுதியளித்து இருக்கிறது.
சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் அந்திமகாலப் பராமரிப்பு நிலையத்திற்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கும் பத்துப் பேரில் நால்வர் மட்டுமே வாழ்வின் இறுதிக்கட்டத்தில் வலியைப் போக்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் நிபுணத்துவ அந்திமகாலப் பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதாக இந்நிலையம் கூறியது.
கோ அறநிறுவனத்தின் நன்கொடை புற்றுநோயாளிகளுக்கான புதிய சுகாதாரப் பராமரிப்புப் பயிற்சித் திட்டத்தின் செயல்திறனை ஆராய உதவும்.
புற்றுநோயுடன் வாழ நேரிடுவோர் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க மேம்பட்ட ஆதரவு வழங்கவும் அது நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கவும் இத்திட்டம் உதவும் என்று கூறப்பட்டது.
கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை மருத்துவமனையில் உயிரிழந்த 9,000 நோயாளிகள் உயிரிழப்பதற்கு ஏறக்குறைய 11 நாள் முன்னர்தான் அந்திமகாலப் பராமரிப்புச் சேவையைப் பெற்றுள்ளனர்.
ஒப்புநோக்க வீட்டிலேயே இச்சேவையைப் பெற்றுக்கொண்டவர்கள் உயிரிழப்பதற்கு 38 நாள்களுக்கு முன்பிருந்து இதனால் பலனடைந்தனர்.
புதிய பயிற்சித் திட்டத்தின்மூலம் சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் நோயாளிகளும் அவர்களின் பராமரிப்பாளர்களும் முதலில் பலனடைவர்.
நோயாளிகள் தங்களது சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை மேம்பட்ட முறையில் திட்டமிட இது உதவும்.
தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய்களால் ஏற்படும் உடல், மனம், உணர்வு ஆகியவை தொடர்பான சிரமங்களைச் சமாளிக்க இது கைகொடுக்கும் என்று சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் அந்திமகாலப் பராமரிப்பு நிலையம் கூறியது.

