தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின்மீது 72 புகார்கள்

தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின்மீது 72 புகார்கள்

3 mins read
492a8c19-f3d0-48fe-857e-4da8cfa65e79
-

சிங்­கப்­பூ­ரில் இருந்து கப்­ப­லில் பொருள்­களை அனுப்­பும் சேவையை வழங்­கி­வ­ரு­கிறது தமி­ழன் எக்ஸ்­பிரஸ் கார்கோ அண்ட் லாஜிஸ்­டிக்ஸ் நிறு­வ­னம்.

இதன் மூலம் இந்­தி­யா­விற்கு அனுப்­பப்­பட்ட பொருள்­கள் உரிய முக­வ­ரிக்கு சென்­று­சே­ர­வில்லை என்று கடந்த ஜன­வரி மாதம் முதல் இது­வரை 72 புகார்­கள் பதி­வா­கி­யுள்­ளன. புகா­ர­ளித்­தோ­ரில் பெரும்­பா­லோர் ஏறக்­கு­றைய ஓராண்டு காலம் ஆகி­யும் பொருள்­கள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­யுள்­ள­னர்.

மின்­ன­ணுச் சாத­னங்­கள், வீட்டு உப­யோ­கப் பொருள்­கள், உணவு, உடை உள்­ளிட்ட இந்­தப் பொருள்­களின் மதிப்பு $90க்கும் $20,000க்கும் இடைப்­பட்­டி­ருப்­ப­தாக 'கேஸ்' எனப்­படும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் தெரி­வித்­தது.

இதன் தொடர்­பில் உதவி செய்­யவோ பணத்­தைத் திருப்­பித் தரவோ நிறு­வ­னம் ஒத்­து­ழைக்­க­வில்லை எனப் புகா­ர­ளித்­தோர் கூறி­னர்.

குறிப்­பிட்ட காலத்­திற்­குள் பொருள் விநி­யோ­கிக்­கும் சேவையை நிறைவு செய்ய இய­லாது எனத் தெரிந்­தும் வாடிக்­கை­யா­ள­ரி­டம் பொருள்­க­ளை­யும் கட்­ட­ணத்­தை­யும் வசூ­லிப்­பது சிங்­கப்­பூ­ரின் பய­னீட்­டா­ளர் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் குற்­ற­மா­கும்.

இத்­த­கைய நியாயமற்ற நட­வடிக்­கை­களை நிறுத்­திக்­கொள்ள இணங்­கும் உடன்­ப­டிக்­கை­யைத் தானா­கவே முன்­வந்து செய்­யும்­ப­டி­யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் புகார்­களுக்கு முறை­யான தீர்­வு­கா­ணும்­படி­யும் நிறு­வ­னத்­திற்கு எச்­ச­ரிக்­கைக் கடி­தம் அனுப்­பப்­பட்­டி­ருப்­ப­தாக 'கேஸ்' கூறி­யது.

லிட்­டில் இந்­தி­யா­வில் செயல்­பட்டு வந்த தமி­ழன் எக்ஸ்­பி­ரஸ் கார்­கோ­ நி­று­வ­னம் மூடப்­பட்­டி­ருந்­த­தை­யும் வேறு இடத்­துக்கு மாற­ இருப்­பது குறித்த அறி­விப்பு கத­வில் ஒட்­டப்­பட்­டி­ருந்­த­தை­யும், சென்ற வாரம் புதன்­கி­ழமை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் கண்­ட­றிந்­தது.

சென்ற ஆண்டு மே மாதம் ஐந்து பெட்­டி­களில் வீட்டு உப­யோ­கப் பொருள்­களை அனுப்ப $900 செலுத்­தி­ய­தா­கக் கூறி­னார் சந்­தா­னம் முத்­து­கார்த்­தி­கே­யன்.

இவர் அனுப்­பி­ய­வற்­றில் $869 மதிப்­புள்ள சம்­சுங் தொலைக்­காட்­சிப் பெட்டி, வெளிநாடு­களில் சுற்­றுலா சென்­ற­போது எடுத்த சட்­ட­மி­டப்­பட்ட படங்­களும் அடங்­கும்.

பல­முறை தொடர்­பு­கொண்­டும் நிறு­வ­னம் தெளி­வான தக­வல்­களைத் தர­வில்லை என்­றார் இவர்.

மறைந்த தாயா­ரின் திரு­ம­ணச் சேலை உள்­ளிட்ட, நினை­வில் நிற்­கும் பல பொருள்­கள் இன்­னும் வந்து சேர­வில்லை என்­றார் பிரி­யங்கா மிஸ்ட்ரி.

சென்ற ஆண்டு டிசம்­ப­ர் மாதம் $250 செலுத்தி சிங்கப்பூரில் இருந்து பூனா­விற்கு இப்­பொ­ருள்­களை இவர் அனுப்­பி­னார்.

சிங்­கப்­பூர்ி­லி­ருந்து பொருள்­கள் இந்­தி­யா சென்­று­சேர மாதக் கணக்­கில் காத்­தி­ருப்­பது வழக்­கத்­துக்­குப் புறம்­பா­னது என்று கூறினர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய சில கப்­பல் நிறு­வனத்­தி­னர்.

பொருள்கள் சென்று சேராவிட்டால் வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியவை

வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருள்கள் குறித்த நேரத்தில் சென்று சேராவிட்டால் வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து வழக்கறிஞர்கள் சிலரைக் கேட்டறிந்தது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்:

* பொருள்களின் மொத்த மதிப்பு $20,000க்குக் குறைவு என்றால் சிறு கோரிக்கை மன்றத்திடம் புகாரளிக்கலாம்.

* புகாரளிப்போர் தாங்கள் கோரும் தொகைக்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

* தொகையைத் திருப்பித் தரும்படி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தால் அதனை அமலாக்கும்படி வாடிக்கையாளர் வலியுறுத்தலாம். முதலில் விநியோகச் சேவை நிறுவனத்தின் சொத்துகளை மதிப்பிடும்படி நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கலாம்.

* நிறுவனம் ரொக்கமாக இழப்பீட்டுத் தொகை தராவிட்டால் அதன் சொத்துகளை முடக்கும்படி நீதிமன்றத்திடம் மனு கொடுக்கலாம்.

* சம்பந்தப்பட்ட நிறுவனம், நியாயமற்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இணங்கும் உடன்படிக்கையைத் தானாகவே முன்வந்து செய்துகொண்டிருந்தால் அதன்மீது 'கேஸ்' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். நிறுவனம் இந்த உடன்படிக்கையை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்புக்குச் சமமாகும்.

* நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புவோர், பொருள்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் விநியோகிக்க அது ஒப்புக்கொண்டதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்தல் அவசியம்.