ஜூரோங் தீவில் புதிய குளம்
ஜூரோங் தீவில் 50 ஒலிம்பிக் போட்டி நீச்சல் குளங்களை நிரப்பும் அளவிலான மழைநீரைக் கொள்ளும் வகையில் புதிய ஒரு குளத்தை ஜூரோங் நகராண்மைக் கழகம் உருவாக்கி இருக்கிறது. இதன்மூலம் பருவநிலை மாற்றம் சார்ந்த வெள்ளம் ஏற்படாதபடி அப்பகுதி பாதுகாக்கப்படும். நீர் ஊடுருவும் தன்மைகொண்ட மணற்பரப்பிற்குமேல் அந்தக் குளம் வெட்டப்பட்டுள்ளது. கடும் புயலால் பொழியும் மழைநீரானது அந்த 8.9 ஹெக்டர் பரப்பளவிலான குளத்திற்குச் செல்லும். பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வுகாணும் விதமாக சிங்கப்பூரில் முதன்முறையாக இத்தகைய அளவில் குளம் வெட்டப்பட்டுள்ளது.
விற்பனை இயந்திரம்வழி நன்கொடை
விற்பனை இயந்திரம் வழியாக எளிதாக நன்கொடை வழங்க ஏதுவாக அத்தகைய 20 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்னன. 'எண்டோவஸ் கிவிங் மெஷின்' எனும் அந்த இயந்திரம் வழியாக 23 அறநிறுவனங்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்து, $5, $10, $15 அல்லது $20 நன்கொடை வழங்கலாம். தாங்கள் வழங்கும் நன்கொடை எவ்வழியில் பயன்படுத்தப் படும் என்பதைச் சித்திரிக்கும் 'வழங்கல் அட்டை'யை நன்கொடையாளர்கள் தெரிவுசெய்யலாம். அவர்கள் வழங்கும் நன்கொடை முதியோருக்கு உணவு வழங்குதல், சிறையில் உள்ள தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றுக்காகச் செலவிடப்படும். யுஓபி பிளாசா, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, ஆர்ச்சர்ட் சென்ட்ரல், கரையோரப் பூந்தோட்டங்கள், ஐயோன் ஆர்ச்சர்ட், ஃபார் ஈஸ்ட் ஸ்குவேர், கிளார்க் கீ மற்றும் மெக்பர்சன் எம்ஆர்டி நிலையம் ஆகிய இடங்களில் இவ்வாண்டு இறுதிவரை அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். Giving.sg இணையத் தளம் வழியாகவும் நன்கொடை தரலாம். இவ்வாண்டு $100,000 திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வடகொரியாவிற்கு பானங்களை அனுப்பிய ஆடவர்
வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக $1.3 மில்லியன் மதிப்புள்ள பானங்களை வழங்கிய போக்கா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் மேலாளருக்கு நேற்று ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அந்த விற்பனைகளால் 59 வயது புவா ஸே ஹீவிற்குத் தரகுப்பணம் எதுவும் கிட்டவில்லை. இருப்பினும், போக்கா இன்டர்நேஷனல் நிறுவனம் விதித்த $1.25 மில்லியன் என்ற மாதாந்திர விற்பனை இலக்கை அடைய அவருக்கு இந்தச் சட்டவிரோத விற்பனைகள் கைகொடுத்தன. இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை புவா நேற்று ஒப்புக்கொண்டார்.
விபத்து: மருத்துவமனையில் எழுவர்
இரண்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துகள், ஒரு கார், நடையர் ஒருவர் தொடர்புடைய விபத்தில் மூன்று வயதுக் குழந்தை உட்பட எழுவர் காயமுற்றனர். பிடோக் சவுத் அவென்யூ 1ஐ நோக்கிச் செல்லும் மரின் பரேட் சாலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து நிகழ்ந்தது. மூன்று முதல் 73 வயதிற்குட்பட்ட ஆறு பயணிகளும்
72 வயது நடையரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

